×

பார்க்கிங்கில் படுத்திருந்த குழந்தை மீது ஏறி இறங்கிய கார்! பதைபதைக்க வைக்கும் சிசிடிவி

 

வாகனம் நிறுத்துமிடத்தில் படுக்க வைத்திருந்த புலம்பெயர்ந்த தொழிலாளியின் குழந்தை ஏறி இறங்கிய காரின் பதைபதைக்க வைக்க சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. 


 
கர்நாடகா மாநிலம், கலபுராகி மாவட்டம் ஷாபாத் பகுதியைச் சேர்ந்த ராஜு, கவிதா தம்பதிக்கு ஏழு வயதில் ஒரு மகனும், மூன்று வயதில் லட்சுமி என்ற மகளும் உள்ளனர். வாழ்வாதாரத்திற்காக புலம்பெயர்ந்து தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில்  பி.என்.ரெட்டிநகர் அருகே உள்ள ஸ்ரீகிருஷ்ணாநகரில் தங்கி கூலிப்பணிகள் செய்து வந்தனர். 

இதனிடையே ஹயத்நகரில் விரிவுரையாளர்கள் காலனியில் பாலாஜி ஆர்கேட் அடுக்குமாடி குடியிருப்புக்கு அடுத்ததாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் கான்கிரீட் போடும் பணிகள் நடைபெற்ற வருகிறது. அங்கு வேலைக்காக வந்திருந்த கவிதா, தனது 3 வயது குழந்தை லட்சுமியை நிழலுக்காக பக்கத்து அடுக்குமாடி குடியிருப்பில்  உள்ள கார் பார்க்கிங் அருகே தூங்க வைத்துவிட்டு    கட்டுமான பணியில் ஈடுபட்டார். 

இந்நிலையில் அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஹரிராமகிருஷ்ணா வெளியூரில் இருந்து காருடன் வந்துள்ளார். அப்போது தனக்கு ஒதுக்கப்பட்ட பார்க்கிங் இடத்தில் குழந்தை கிடப்பதை கவனிக்காமல் காரை நிறுத்த முயன்றார். இதில், குழந்தையின் தலையில் காரின் முன் சக்கரம் ஏறி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சோகத்தை பார்த்து தாய் அதிர்ச்சி அடைந்தார். 

அக்கம் பக்கத்தினர் உதவியுடன்,  குழந்தையை வனஸ்தலிபுரம்  மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து ஹயத்நகர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.