×

பட்ஜெட் 2022-23: "14 துறைகளில் 60 லட்சம் வேலைவாய்ப்புகள்" - அறிவித்தார் நிதியமைச்சர்!

 

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இந்தியாவை மையம் கொண்டுள்ளது. ஆரம்பத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அனைத்து துறைகளும் பயங்கரமாக அடிவாங்கின. முழு ஊரடங்கு தொடர்ந்துகொண்டே சென்றதால் இளைஞர்கள் பலர் வேலைவாய்ப்பை இழந்தனர். அதேபோல ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து அடிப்படை தேவைகளை நிறைவேற்றிட கூட முடியாமல் தவித்து வந்தனர். இது ஒருபுறம் என்றால் நாட்டின் பணவீக்கம் அதிகரித்துக் கொண்டே சென்றது. 

பெட்ரோல், டீசல் விலையும் எகிறியதால் பொருட்களின் விலை அதிகரித்தது. அனைத்து தரப்பிலும் கடும் அழுத்தத்தை ஏற்படுத்தியது. நாட்டில் வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் அதிகரித்தால் பொருளாதார வளர்ச்சியும் சரிவைச் சந்தித்தது. இதற்குப் பின்பே முழு ஊரடங்கு தளர்த்தப்பட்டது. கொரோனா நிவாரணங்களும் அறிவிக்கப்பட்டன. இதன் காரணமாக நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாறியது. ஆனால் இரண்டாம் அலை மொத்தமாக குலைத்து போட்டது. மீண்டும் பொதுமுடக்கம்... மீண்டும் வாழ்வாதாரம் பாதிப்பு ரிப்பீட்டு என்றே மக்களின் மன அழுத்தத்தை அதிகரித்தது.

இரண்டாம் அலையிலிருந்து மீண்ட போதிலும் இப்போது வரை கட்டுப்பாடுகள் தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது. ஆகவே வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டிய கட்டாயத்திற்கு மத்திய அரசு தள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் நடப்பாண்டுக்கான (2022-23) பட்ஜெட்டில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு இடம்பெறும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இச்சூழலில் பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “ஆத்மநிர்பர் பாரத் (சுயசார்பு இந்தியா) இலக்கை அடைவதற்கான உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்பு திட்டம் (PLI) பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

இதன்மூலம் அடுத்த ஐந்தாண்டுகளில் 30 லட்சம் கோடி கூடுதல் உற்பத்தியை உருவாக்கும் சாத்தியம் உள்ளது. அதேபோல 60 லட்சம் வேலைவாய்ப்புகளும் உருவாகும். மொத்தமாக 14 துறைகளில் இந்த வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். பிரதமரின் கதி சக்தி திட்டம் பொருளாதாரத்தை முன்னோக்கி இழுத்து, இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளுக்கும் வாய்ப்புகளுக்கும் வழிவகுக்கும்” என்றார்.