4 நாட்களாக காணவில்லை என தேடிய சிறுவன் சாக்கடையில் சடலமாக மீட்பு- நடந்தது என்ன?
டெல்லியில் நான்கு நாட்களாகக் காணாமல் போனதாக கூறப்படும் சிறுவனின் உடல் திறந்த சாக்கடையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
டெல்லியின் ஜசோலா கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் மிதுன் சனிக்கிழமை காலை தெருவில் பட்டம்விட்டு விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது பட்டம் பின்னாடியே சென்ற சிறுவன், திறந்திருந்த வடிகாலில் தவறி விழுந்தான். இதுகுறித்து அறியாத சிறுவனின் பெற்றோர், நான்கு நாட்களாக சிறுவனை காணவில்லை என பல இடங்களில் தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில், செவ்வாய்க்கிழமையான இன்று அவனது உடல் சாக்கடையில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மிதுனின் குடும்பம், அப்பகுதியில் வசித்து வருவதுடன், டெல்லியில் கூலித் தொழிலாளர்களாகவும் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கவனக்குறைவாக இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், தென்கிழக்கு (மத்திய) மண்டலத்தைச் சேர்ந்த ஒரு இளநிலைப் பொறியாளரை டெல்லி மாநகராட்சி (MCD) இடைநீக்கம் செய்தது. அந்த அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை தொடங்கப்பட்டு வருவதாகவும்தெரிவித்துள்ளது.