×

"கண்ணன்-ராதா பாடலுக்கு குத்தாட்டம்... 3 நாள் கெடு” -  சன்னி லியோனுக்கு பாஜக அமைச்சர் வார்னிங்!

 

ஃபார்ன் படங்கள் மூலம் பிரபலமடைந்தவர் சன்னி லியோன். இவர் இந்திய வம்சாவளியை சார்ந்த இந்தோ-கன்னடியன். லியோன் 2012ஆம் ஆண்டு ஜிஸ்ம் 2 என்ற திரைப்படத்தின் மூலம் இந்திய சினிமாவில் அறிமுகமானார். அதிலிருந்து தற்போது வரை பாலிவுட்டில் தான் தன்னுடையை முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் Madhuban Mein Radhika Nache Re என்ற பழைய பாடலின் ரீமிக்ஸில் சன்னி லியோன் நடனமாடியுள்ளார். கடந்த 22 ஆம் தேதி "சரிகம" யூடியூப் சானலில் வெளியானது. இப்பாடல் தற்போது 1.1 கோடி பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

இந்தப் பாடல் 1966ஆம் ஆண்டு வெளியான பாடல். இந்து கடவுள் கிருஷ்ணா, ராதாவுக்கு இடையேயான காதலை வெளிப்படுத்தும் வகையிலான இப்பாடல் மிகவும் பிரபலமானது. இதனை ரீமிக்ஸ் செய்துள்ளனர். இப்பாடலுக்கு சன்னி லியோன் படு கவர்ச்சியாக தனக்கே உரிய நடன அசைவுகளுடன் நடனமாடியுள்ளார். எடுத்ததற்கெல்லாம் வழக்கமாக புண்படக்கூடிய இந்து சாமியர்கள் தான் சன்னி லியோன் வீடியோவுக்கும் புண்பட்டிருக்கிறார்கள். அரசு சன்னி லியோனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், அவரது வீடியோ ஆல்பத்தை தடை செய்யவும் சாமியார் சாந்த் நாவல் கிரி மகராஜ் வலியுறுத்தினார்.

அப்படி செய்யவில்லையென்றால் நீதிமன்றத்திற்கு செல்வோம் எனவும் எச்சரித்திருந்தார். சினிமா ரசிகர்கள் இந்தப் பாடலை வரவேற்றாலும், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் போன்ற இந்து அமைப்பு ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் சன்னி லியோனுக்கு எதிராக கம்பு சுற்றி வருகின்றனர். அவரை நாடு கடத்த வேண்டும் என சொல்கின்றனர். மத்தியப் பிரதேச மாநிலத்தின் உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ராவும் இப்பாடலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். 

அவர் இதுதொடர்பாக கூறுகையில், "சிலர் தொடர்ந்து இந்து மத உணர்வை புண்படுத்துகிறார்கள். ராதாவுக்கு கோவில்கள் இருக்கின்றன. நாங்கள் ராதாவை கடவுளாக வணங்குகிறோம். இசையமைப்பாளர் சாகிப் தோஷி அவர் மதம் தொடர்பாக பாடலை உருவாக்க வேண்டியதுதானே.  மூன்று நாட்களுக்குள் இப்பாடலை நீக்கிவிட்டு மன்னிப்பு கேட்கவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்திருந்தார். இதையடுத்து சரிகம நிறுவனம் மூன்று நாட்களில் இப்பாடலின் வரிகளும், தலைப்பும் மாற்றி புதிய பாடலை வெளியிடுவோம் என கூறியுள்ளது.