×

"அது கோடாரி தைலமா? வேக்சினா?" - 11 டோஸ் போட்டுக்கொண்ட விசித்திர மனிதர்... ஆடிப்போன பீகார்!

 

சிவா நடித்த "தமிழ்ப்படம்" பாணியில் மரு வைத்து ரவுடிகளை ஏமாற்றுவதைப் போல கொரோனா உருமாறி மனிதர்களை அச்சத்திலேயே உறைய வைத்திருக்கிறது. டெல்டா கொரோனா தான் இதுவரை ஆபத்தான கொரோனாவாகப் பார்க்கப்பட்டது. அப்போ நாங்கனாப்ள யாரு என கேட்டுக்கொண்டே பல்வேறு நாடுகளில் ஒமைக்ரான் கொரோனா என்ட்ரி கொடுத்துள்ளது. 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களையும் தாக்கும் என்பதே ஒமைக்ரானின் ஸ்பெஷல். இதனால் பல்வேறு நாடுகள் பூஸ்டர் டோஸ் போடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றன. 

இந்தியாவில் ஒரு டோஸ் போடுவதற்கே மக்கள் அச்சப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அதனால் அவர்களே தடுப்பூசி மையத்திற்கு இழுத்துவரவே மாநில அரசுகள் பெரும் பாடுபடுகின்றன. இங்கே விஷயம் முதியவர் ஒருவர் 11 டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளார். ஷாக்கிங்காக இருக்கிறதா? உண்மையிலேயே பீகாரைச் சேர்ந்த முதியவர் ஒருவர் 11 டோஸ் போட்டும் பற்றாமல் 12 டோஸ் போட வரும்போது வசமாக சிக்கிக் கொண்டார்.  மாதேபுரா மாவட்டத்தின் ஓரை கிராமத்தில் வசிக்கும் பிரம்மதேவ் மண்டல் (84) என்ற முதியவர் தான் அவர். 

12ஆவது முறை தடுப்பூசி செலுத்த வரும்போது தான் அவர் ஏற்கெனவே 11 முறை தடுப்பூசி செலுத்திக்கொண்ட விவகாரமே தெரியவந்துள்ளது. குறிப்பாக கடந்த பிப்ரவரி மாதம் முதல் டிசம்பர் 30 ஆம் தேதி வரை, 11 டோஸ்களை செலுத்திக்கொண்டுள்ளார். இது எப்படி சாத்தியம் என நீங்கள் கேட்கலாம். அதாவது தடுப்பூசி செலுத்தாத வெவ்வேறு நபர்களின் ஐடியை வைத்துக்கொண்டு வெவ்வேறு நம்பர்களின் உதவியுடன் இவ்வாறு செய்துள்ளார். ஒரே மையத்தில் போட்டால் கண்டுபிடித்துவிடுவார்கள் என எண்ணி வெவ்வேறு மையங்களில் போட்டுள்ளார்.

என்ன தேதியில் எந்த இடத்தில் என்ன தடுப்பூசி செலுத்திக்கொண்டேன் என ஒவ்வொரு டேட்டாவையும் மனப்பாடமாகவும் ஒப்பித்திருக்கிறார் அந்த விசித்திர மனிதர். இதை நினைத்து சிரிப்பதா, கவலை கொள்வதா என மாதேபுரா மாவட்ட சுகாதார துறை நொந்து போயுள்ளது. இதற்கு அவர் கூறும் காரணம் தான் வினோதம். அதாவது தடுப்பூசி செலுத்திக்கொண்டதால் முதுகு வலி, இடுப்பு வலி என பல வலிகளைக் குணப்படுத்துவதால், இவ்வாறு தடுப்பூசி போட்டுக்கொண்டதாக தெரிவித்துள்ளார். வேக்சின் போட்டால் உயிர் போய்விடும் என ஒருசில மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறர்கள். 

ஆனால் நம்மாளோ கோடாரி தைலம் ரேஞ்சுக்கு வேக்சினை லெப்ட் ஹேண்டில் ட்ரீட் செய்திருக்கிறார். உடனே விசாரணையை முடுக்கிவிட மாவட்ட சுகாதார துறை உத்தரவிட்டுள்ளது. இப்படி நடப்பது முதன்முறையல்ல. இதேபோல நியூஸிலாந்திலும் நபர் ஒருவர் 10 முறை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். அவரும் மண்டல் பிரயோகித்த அதே பாணியில் தான் தடுப்பூசி செலுத்திக்கொண்டார். அவர் கூறிய காரணம் கூட ஏற்றுக்கொள்ளக் கூடியதே. ஏனென்றால் கொரோனா எத்தனை உருமாறினாலும் அதிலிருந்து உயிர் பிழைக்கவே அப்படி செய்தேன் என்று கூறியிருந்தார்.