×

மம்தாவின் தலைவிதியை நிர்ணயிக்கும் இடைத்தேர்தல்... குறைவான அளவே வாக்குப்பதிவு! 

மேற்கு வங்க முதலமைச்சராக மம்தா நீடிப்பாரா, மாட்டாரா என்பதை நிர்ணயிக்கும் பபானிபூர் இடைத்தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 53.32 சதவீத வாக்க்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.
 

நந்திகிராமில் சுவேந்து அதிகாரியை எதிர்த்து போட்டியிட்டு 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி

முதலமைச்சராக நீடிக்க பபானிபூர் தொகுதியில் போட்டி

மம்தாவுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தாத காங்கிரஸ்

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவின் கோட்டை பபானிபூர் தொகுதி. ஆனால் அந்தக் கோட்டையை விட்டு சுவேந்து அதிகாரியின் சவாலை ஏற்று நந்திகிராமில் போட்டியிட்டார். ஆனால் தோல்வியடைந்தார். ஆரம்பத்தில் மம்தா 1,500 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக தகவல் வெளியானது. ஆனால் தேர்தல் ஆணையம் மம்தா தோல்வியடைந்ததாக அறிவித்தது. சுவேந்தின் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடுத்துள்ளார். 

இந்த வழக்கில் வெற்றிபெறுவதற்குள் அடுத்த தேர்தலே வந்துவிடும். 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தலில் எம்எல்ஏவானால் தான் முதலமைச்சர் பதவியில் நீடிக்க முடியும். ஆகவே மீண்டும் கோட்டைக்குச் செல்ல முடிவெடுத்தார். அதற்காக அங்கு எம்எல்ஏவாக இருந்த ஷோபன்தேவ் சட்டோபாத்யாயை ராஜினாமா செய்ய வைத்தார். சமீபத்தில் அந்தத் தொகுதியோடு சேர்த்து அங்குள்ள 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. 

காங்கிரஸ் மம்தாவை எதிர்த்து போட்டியிடப் போவதும் இல்லை. எதிர் பிரச்சாரம் செய்யப்போவதும் இல்லை என திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. பிரதான எதிர்க்கட்சியான பாஜக 41 வயதான பிரியங்கா திப்ரேவால் என்ற வழக்கறிஞரை மம்தாவுக்கு எதிராகக் களமிறக்கியது. அதேபோல சிபிஎம் ஸ்ரீஜிப் பிஸ்வாஸ் என்பவரை வேட்பாளராக அறிவித்தது. நினைத்தைப் போலவே தேர்தல் பிரச்சாரங்கள் காரசாரமாகவே இருந்தன. தேர்தலில் தோல்வியுற்று மம்தா முதலமைச்சர் பதவியை இழப்பார் என பாஜகவினர் கிண்டலடித்தனர். மம்தாவும் தன் பங்கிற்கு விளாசினார்.

பரபரப்பான சூழலில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. மொத்தம் 6 லட்சத்து 97 ஆயிரத்து 164 வாக்காளர்கள் உள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி, பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றுவந்தது. சட்டப்பேரவை தேர்தலுக்கு இருந்த வரவேற்பு இந்தத் தேர்தலுக்கு கிடைக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். 5 மணி நிலவரப்படி 53.32 சதவீத வாக்கு மட்டுமே பதிவாகியுள்ளது. இதனால் தேர்தல் முடிவுகள் எப்படியிருக்கும் என்பது புரியாத புதிராக இருக்கிறது.