×

ஓய்வு எடுக்க வேண்டிய வயதுதான்… ஆனால் ஆன்லைனில் ஏழை குழந்தைகளுக்கு டியூசன் எடுக்கும் தம்பதியனர்

கர்நாடகாவில் வயதான பத்ரிநாத் தம்பதியினர் ஆன்லைனில் ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக டியூஷன் எடுத்து வருகின்றனர். நாம் ஒருவருக்கு உதவி செய்ய வேண்டுமானால் பணமாகத்தான் கொடுத்து உதவ வேண்டும் என்ற அவசியம் இல்லை. நம் கற்ற கல்வி அறிவையும் மற்றவர்களுக்கு கொடுத்து உதவலாம் என்பதை கர்நாடக வயதான தம்பதியினர் நிரூபணம் செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 82 வயதான பத்ரிநாத் விட்டலும், அவரது மனைவி இந்திரா விட்டலும் வசித்து வருகின்றனர். பத்ரிநாத் விட்டல் ஓய்வு பெற்ற சிவில் என்ஜினீயர்
 

கர்நாடகாவில் வயதான பத்ரிநாத் தம்பதியினர் ஆன்லைனில் ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக டியூஷன் எடுத்து வருகின்றனர்.

நாம் ஒருவருக்கு உதவி செய்ய வேண்டுமானால் பணமாகத்தான் கொடுத்து உதவ வேண்டும் என்ற அவசியம் இல்லை. நம் கற்ற கல்வி அறிவையும் மற்றவர்களுக்கு கொடுத்து உதவலாம் என்பதை கர்நாடக வயதான தம்பதியினர் நிரூபணம் செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 82 வயதான பத்ரிநாத் விட்டலும், அவரது மனைவி இந்திரா விட்டலும் வசித்து வருகின்றனர். பத்ரிநாத் விட்டல் ஓய்வு பெற்ற சிவில் என்ஜினீயர் மற்றும் ஐ.ஐ.டி. பாம்பே முதுகலை பட்டதாரி. விட்டலும், அவரது மனைவியும் கர்நாடகா முழுவதும் 100க்கும் மேற்பட்ட ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக ஆன்லைனில் டியூஷன் எடுத்து வருகின்றனர். இது தொடர்பாக பத்ரிநாத் விட்டல் செய்தி ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

பத்ரிநாத் விட்டல் தம்பதியினர்

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் எங்கள் வீட்டில் வேலைபார்க்கும் பெண் 6ம் வகுப்பு படிக்கும் தனது மகளை டியூஷனில் சேர்ப்பதற்கு பணம் தந்து உதவும்படி எங்களிடம் உதவி கேட்டார். ஆனால் நானும் எனது மனைவியும் பணம் கொடுப்பதற்கு பதில் வேலைக்கார பெண்ணின் மகளுக்கு இலவசமாக டியூஷன் எடுக்க முடிவு செய்தோம். இதனையடுத்து நான் வேலைக்கார பெண்ணின் மகளுக்கு அறிவியல், கணிதம் சொல்லி கொடுத்தேன், எனது மனைவி மொழி பாடங்களையும், சமூக பாடங்களை எனது மனைவி சொல்லி கொடுத்தாள். அடுத்த சில வாரங்களில் வேலைக்கார பெண்ணின் கின்டர்கார்டன் செல்லும் 2வது மகளும் எங்களிடம் டியூஷனுக்கு வந்தாள்.

கற்பித்தல்

மேலும் அதேபகுதியில் வசிக்கும் இன்னும் சில தம்பதியினர் தங்களது குழந்தைகளுக்கு கற்பிக்கும்படி கேட்டுக்கொண்டனர். இதனையடுத்து டியூஷன் மாணவர்களின் எண்ணிக்கை 2லிருந்து 8ஆக உயர்ந்தது. லாக்டவுன் காரணமாக குழந்தைகள் டியூஷன் வர முடியவில்லை. ஆனால் டியூஷனை தொடர விரும்பினேன். இதனையடுத்து ஆன்லைனில் டியூஷன் எடுக்க தொடங்கினோம். எங்களது இந்த முயற்சியை உள்ளூர் பத்திரிகை செய்தியாக வெளியிட்டது. இதனால் கர்நாடகம் முழுவதும் எங்களது டியூஷன் பிரபலமானது. இதனையடுத்து மாநிலத்தின் பல பகுதிகளை சேர்ந்த பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கும் கற்று கொடுக்கும்படி கோரிக்கை விடுத்தனர்.

ஆன்லைன் வகுப்பு

அதேசமயம் சில பெற்றோர்கள் தங்களிடம் செல்போன் இல்லை என்றும் கிடைத்தால் அவர்களது குழந்தையும் ஆன்லைன் டியூஷன் வகுப்பில் கலந்து கொள்ள முடியும் என்று தெரிவித்தனர். எனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் அவர்களுக்கு செல்போன் வழங்குமாறு கோரிக்கை விடுத்தேன். இதன் பலனாக 30 குழந்தைகளுக்கு செல்போன் கிடைத்தது. தற்போது எங்களிடம் ஆன்லைன் டியூஷன் கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை 100ஐ தாண்டி விட்டது. மாணவர்கள் அனைவரும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள். நாங்கள் அவர்கள் அனைவருக்கும் இலவசமாகதான் டியூஷன் எடுக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். தற்போது டியூஷனில் சேர மாணவர்கள் மட்டும் ஆர்வம் காட்டவில்லை, மாணவர்களுக்கு கற்று கொடுக்க ஓய்வு பெற்ற ஆசிரியர்களும், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்களும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.