தண்ணீருக்குள்ளேயே வசிக்கும் 16 வயது சிறுவன்! விதியா? சாபமா?
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன், கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாகக் குளங்களிலேயே வசித்து வருகிறான்.
மேற்கு வங்கத்தில், 16 வயதான இக்பால் ஷேக் என்ற சிறுவன், கடந்த 5 ஆண்டுகளாக பெரும்பாலான நேரத்தை கிராமத்து குளத்திலேயே கழித்து வருகிறார். சில சமயங்களில் தொடர்ச்சியாக நான்கு முதல் ஏழு நாட்கள் வரை நீரில் மூழ்கியிருக்கிறான். முர்ஷிதாபாத் மாவட்டத்தின் பெல்டங்காவைச் சேர்ந்த இக்பால் ஷேக், தண்ணீரைவிட்டு வெளியே வந்தால், உடல் முழுவதும் தாங்க முடியாத எரிச்சலும் வலியும் ஏற்படுவதாகவும், அந்த வலி காரணமாக நீரிலேயே வசிப்பதாகவும் ஷேக் கூறுகிறார். நீண்ட நேரம் தண்ணீரில் இருந்ததால், அவரது கைகள், கால்கள் மற்றும் உடலின் பிற பாகங்களில் உள்ள தோல் வெளிறி, நீர் தேங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், அவருக்கு விடாப்பிடியான சளி மற்றும் இருமல் அறிகுறிகளும் ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். கிராமவாசிகள் கொண்டுவரும் அவல், பிஸ்கட்டுகள் மற்றும் பிற தின்பண்டங்கள் உள்ளிட்ட உணவை உண்டு இக்பால் ஷேக் உயிர் வாழ்வதாகக் கூறப்படுகிறது.
'எரித்ரோமெலால்ஜியா' போன்ற அரிய நரம்பியல் நோய் (அ) தோல் பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். சிகிச்சைக்கு வசதியில்லாததால், அரசு உடனடியாக மருத்துவ உதவி வழங்க வேண்டும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார். பள்ளிக்குழந்தைகள் உட்பட அப்பகுதி மக்கள், அவரைப் பார்ப்பதற்காகக் குளங்களைச் சுற்றி அதிகளவில் கூடிவருகின்றனர்.