சொந்த வீட்டிலேயே திருடி காதலிக்கு ஐபோன் வாங்கி கொடுத்த நபர் கைது
அசாமில் பெற்றோர் வெளியூர் சென்றிருந்த நேரத்தில் வீட்டில் இருந்து ரூ.50 லட்சம் பணம் (ம) நகைகளை திருடி தனது காதலிக்கு ஆடம்பர பரிசுகளை வாங்கிக்கொடுத்த மகனை, அவரது அப்பா போலீசிடம் ஒப்படைத்தார்.
அஸ்ஸாமின் ஜோர்ஹட்டை சேர்ந்த யஷ் தனுக்கா, தனது பெற்றோர் சில நாட்களுக்கு வெளியூர் சென்றிருந்தபோது, அவர்களது அறையில் இருந்த லாக்கரை உடைத்து, 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் தங்க நகைகளைத் திருடியுள்ளார். அதன்மூலம் கிடைத்த பணத்தை கொண்டு தனது காதலிக்கு விலையுயர்ந்த பரிசுகளை வாங்கி கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி, காதலியுடன் சுற்றுலா செல்வது, விருந்துக்கு செல்வதுமாக உல்லாசமாக செலவழித்துள்ளார். சுமார் 1.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐபோனை காதலிக்கு பரிசாக அளித்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து யஷ் தனுக்காவின் தந்தை அளித்த புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை செய்துவருகின்றனர். செல்போன் எண்ணை கொண்டு அவரது மகன் அகமதாபாத்தில் இருப்பதாக போலீஸ் கூறியதையடுத்து, அங்கு சென்று மகனை அழைத்து வந்து போலீசிடம் தந்தை ஒப்படைத்துள்ளார். இந்தத் திருட்டால் அக்குடும்பத்தினர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் தற்போது நகைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் திருடப்பட்ட பணம் எவ்வாறு செலவழிக்கப்பட்டது மற்றும் இதில் மற்ற நபர்களுக்கும் தொடர்பு இருக்க வாய்ப்புள்ளதா என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.