×

குஜராத் மாநிலத்தில் பாஜக விரட்டி அடிக்கப்படும்- அரவிந்த் கெஜ்ரிவால்

 

பாரதிய ஜனதா கட்சியினர் எங்களுக்கு எதிராக ஏதாவது செய்ய சொன்னால் அதை மறுத்து விடுங்கள், 2 மாதங்களுக்கு பிறகு குஜராத் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சி என குஜராத் மாநில போலீசாரை மேற்கோள் காட்டி அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

குஜராத் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் விரைவில்  நடைபெற உள்ள நிலையில் குஜராத் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி தளத பிரச்சாரத்தை தீவிர படுத்தியுள்ளது.  இரண்டு நாள் பயணமாக குஜராத் மாநிலம் சென்றுள்ள ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்றைய தினம் குஜராத் மாநிலத்தில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவரின் வேண்டுகோளை ஏற்று இரவு விருந்துக்கு அவர் இல்லத்திற்கு ஆட்டோவில் சென்றார்.  அப்போது ஆட்டோவை மறித்த குஜராத் மாநில போலீசார் பாதுகாப்பு விதிமுறைகளை மேற்கோள் காட்டி அரவிந்த் கெஜ்ரிவால் செல்ல மறுத்தனர்; அப்போது டெல்லியிலும் பஞ்சாப் மாநிலத்திலும் தான் ஆட்டோவில் சென்ற போது தனக்கு எந்த வகையிலும் பாதுகாப்பு குறைபாடு ஏற்படவில்லை என பேசினார். இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் பயணித்த ஆட்டோவுக்கு முன்னும் பின்னும் இரண்டு காவல்துறை வாகனங்கள் செல்ல அரவிந்த் கஜ்ரிவால் தொடர்ந்து தன்னுடைய பயணத்தை மேற்கொண்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் 

அதில், “குஜராத் காவல் துறைக்கு தனது அன்பான வேண்டுகோள். காவல்துறையினருக்கு தேவையான தர ஊதியம் மற்றும் துறை சார்ந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் ஆம் ஆத்மி கட்சி ஆதரவு அளிக்கும். குஜராத் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தவுடன் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் அமல்படுத்தப்படும். ஆம் ஆத்மி கட்சி உங்களுடன் துணை நிற்கிறது, பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த தலைவர்கள் எங்களுக்கு எதிராக ஏதேனும் செய்ய கூறினால் அதனை பயப்படாமல் மறுத்து விடுங்கள். இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ளது ஆம் ஆத்மி கட்சி குஜராத் மாநிலத்தில் ஆட்சி அமைக்கும். பாரதிய ஜனதா கட்சி குஜராத் மாநிலத்திலிருந்து விரட்டி அடிக்கப்படும்” என பதிவிட்டுள்ளார். 

தேர்தல் வாக்குறுதியாக குஜராத் மாநில போலீசாருக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த நாட்களில் அறிவித்ததற்கு பிறகு குஜராத் மாநில காவல்துறைக்கு பாஜக தலைமையிலான அரசு குஜராத் அரசு ஊதிய உயர்வு வழங்கியது என்பது இந்த நேரத்தில் குறிப்பிடத்தக்கது.