×

"யாரும் பீதியாக வேண்டாம்; நாங்க ரெடியா இருக்கோம்" - மக்களுக்கு பூஸ்ட் கொடுத்த முதல்வர்! 

 

இந்தியாவில் மூன்றாம் அலை தொடங்கியதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துவிட்டன. மகாராஷ்டிராவில் ஏற்கெனவே 3ஆம் அலை தொடங்கிவிட்டதாக கோவிட் சிறப்பு தடுப்பு குழு அறிவித்துவிட்டது. அங்கு 20 எம்எல்ஏக்கள் 10 அமைச்சர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதேபோல இந்தியாவில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு 10 ஆயிரமாக இருந்த தினசரி கொரோனா பாதிப்பு இன்று 27 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இது யாரும் எதிர்பார்த்திராத திடீர் உயர்வு.

புதிதாக வந்த ஒமைக்ரானும் ஏற்கெனவே இருந்த டெல்டா கொரொனாவும் ஒன்று சேர்ந்துகொண்டு தாக்குவதால் பாதிப்பு எண்ணிக்கை உயர்வதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது. ஒமைக்ரானால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தலைநகர் டெல்லியும் ஒன்று. அங்கு ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 351. இந்தியளவில் மொத்த பாதிப்பு 1,525. ஆக தேசியளவில் 23.4 சதவீதமாக தலைநகர் டெல்லியில் ஒமைக்ரான் பாதிப்பு உள்ளது. அதேபோல ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் டெல்லியில் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. 

நேற்று அங்கு 2,716 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. டிசம்பர் 31ஆம் தேதியோடு ஒப்பிடுகையில் இது 51 சதவீதம் அதிகமாகும். இந்தச் செய்திகள் டெல்லி மக்களிடம் பீதியை கிளப்பியுள்ளது. இச்சூழலில் மாநில மக்களிடம் பேசியுள்ள முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், "டெல்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்காக பொதுமக்கள் யாரும் பீதியடைய தேவையில்லை. டெல்லியில் சிகிச்சை பெறுகிறவர்களின் எண்ணிக்கை 6,360. இதூ கடந்த 3 நாட்களை விட 3 மடங்கு அதிகம்.

மருத்துவமனைகளில் இதுவரை 246 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய நிலையில் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கைகளில் 82 பேர் உள்ளனர்.  ஆக்சிஜன் தேவை என கொரோனா பாதிக்கப்பட்ட எவரும் மருத்துவமனைக்கு அழைத்து வரப்படவில்லை. டெல்லியில் 37,000 படுக்கைகள் தயார் நிலையில் இருக்கின்றன. அரசு முன்னெச்சரிக்கையாக இருப்பது போல் பொதுமக்களும் பொது இடங்களில் முக கவசம் அணிவதை கட்டாயம் பின்பற்ற வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்” என்றார்.