×

அடிக்கு மேல் அடி! ராகுல் காந்தி மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு

 

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு ஏற்கனவே இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2019ம் ஆண்டு நிரவ் மோடி தப்பி ஓடிய விவகாரத்தில், எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது என ராகுல் காந்தி பேசியிருந்தார். மோடி என்ற பெயரை பயன்படுத்தி ஒரு சமூகத்தையே திருடர் என கூறியுள்ளார் என குற்றம்சாட்டி ராகுல் காந்திக்கு எதிராக சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மோடி சமூகம் குறித்து சர்ச்சையாக பேசியது தொடர்பான அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நீதிமன்றம்  தீர்ப்பு அளித்தது.  அதேநேரம் மேல்முறையீடு செய்ய உள்ளதாக  ராகுல்காந்தி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதை அடுத்து,  அதற்கு அனுமதி அளிக்கும் விதமாக  30 நாட்கள் அவகாசம் அளித்து  நீதிமன்றம் பினை வழங்கியிருந்தது. இதனை தொடர்ந்து வயநாடு தொகுதி எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.  அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு ஜெயில் தண்டனையை எதிர்த்து ராகுல்காந்தி சூரத்தில் உள்ள செசன்ஸ் கோர்ட்டில் மேல்முறையீடு செய்த நிலையில், அவரது ஜாமீன் நீட்டிக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.  

இந்த நிலையில், ராகுல்காந்தி மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சாவர்க்கர் குறித்து அவதூறாக பேசியதாக புனே நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மீது சாவர்க்கரின் பேரன் வழக்கு தொடர்ந்துள்ளார். லண்டனில் பேசியபோது அவதூறு கருத்துகளை ராகுல் தெரிவித்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. சூரத், பாட்னா நீதிமன்றத்தை தொடர்ந்து புனே நீதிமன்றத்திலும் ராகுல் காந்தி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.