×

"ஒமைக்ரானை லேசா எடை போடாதீங்க; ஆபத்தும் இருக்கு" - எய்ம்ஸ் மருத்துவர் வார்னிங்!

 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெறும் 10 ஆயிரம்  மட்டுமே பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு எகிறி அடிக்கிறது கொரோனா. இதற்குக் காரணம் ஒமைக்ரான். புதிதாக வந்த ஒமைக்ரான் ஏற்கெனவே உள்ள டெல்டாவுடன் ஜோடி சேர்ந்துள்ளது. இதனால் தான் இந்தளவுக்கான ஏற்றம் கண்டுள்ளது. இப்படியே போனால் இன்னும் சில தினங்களில் தினசரி 5 லட்சத்திற்கும் அதிகமான பாதிப்பு ஏற்படலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

எண்ணிக்கையைக் கண்டு அதிர்ந்துபோனாலும் ஒமைக்ரான் அவ்வளவாக பெரிய பாதிப்பை உண்டாக்குவதில்லை என சொல்லப்படுகிறது. முதன்முதலில் கண்டறியப்பட்ட தென்னாப்பிரிக்காவில் மற்ற கொரோனா அலைகளை விட ஒமைக்ரானால் ஏற்பட்ட அலை பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் கூட மிகக் குறைவாகவே இருந்தது என அந்நாட்டு நிபுணர்கள் கூறினர். அபாயகரமான டெல்டாவை விட வேகமாகப் பரவினாலும், 2 டோஸ் போட்டுக்கொண்டவர்களை தாக்கினாலும் 3 நாட்களில் ஓடி விடுகிறது ஒமைக்ரான். இதெல்லாம் முதற்கட்ட தகவல்கள் தான். 

மேற்கொண்டு ஆராய்ச்சிகளின் முடிவில் தான் தெரியவரும். ஒரே சமயத்தில் டெல்டா 10 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தினால் ஒமைக்ரான் 100 பேருக்கு பாதிப்பை உண்டாக்குகிறது. இதில் இரண்டுமே 1% பேரை மிக தீவிரமாக தாக்குவதாக வைத்துக் கொள்வோம். பத்தில் ஒருவரை டெல்டா அதிகமாக பாதித்தால் ஒமைக்ரான் 10 பேரை மிக மோசமாக பாதிப்புக்குள்ளாக்குகிறது. ஆகவே இங்கே சதவீத கணக்கெல்லாம் வேலைக்கு ஆகாது. ஒமைக்ரானை லேசாக எடை போட்டுவிடக் கூடாது. இதைத் தான் எய்ம்ஸ் மருத்துவர் தன்மய் மோதிவாலாவும் கூறியுள்ளார். அண்மையில் தான் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ள அவர் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளிக்கையில், "முதல் இரு அலைகளில் மருத்துவர்களுக்கு தொற்று ஏற்பட்டது தான். ஆனால் 3ஆம் அலையில் அதிக எண்ணிக்கையிலான மருத்துவ பணியாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது வேதனையளிக்கிறது. பேரிடர் காலங்களில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படும் வேளையில், மருத்துவர்களுக்கும் தொற்று ஏற்பட்டால் என்ன செய்வது? சுகாதார துறைக்கு பெரும் சுமை தான். ஆகவே மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை தவறாது பின்பற்ற வேண்டும். 

அனைவரும் முகக்கவசம் அணிந்து தங்கள் வீடுகளில் அமர்ந்தால் தான் ஹீரோவாக முடியுமே தவிர, வெளியில் வந்து தானும் கொரோனாவை விலைக்கு வாங்கி ஏராளமானோருக்கு பரப்பவும் கூடாது. தடுப்பூசிகளை எடுத்துக் கொள்வது மிகச்சிறந்த பாதுகாப்பு. நல்ல நோய் எதிர்ப்பு சக்தி உள்ள சிலர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டால், அறிகுறிகள் லேசாக இருக்கலாம். ஆனால் ஏற்கெனவே இணை நோய் உள்ளவர்கள், முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உடையவர்கள் போன்ற ஆபத்தில் உள்ளவர்களுக்கு இது மிகவும் ஆபத்தானது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது என நினைக்காதீர்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்களையும் நினைவில் கொள்ளுங்கள்” என்றார்.