×

மத்திய அரசின் கருப்பு அவசர சட்டத்துக்கு எதிராக ராம்லீலா மைதானத்தில் மெகா பேரணி.. ஆம் ஆத்மி அறிவிப்பு

 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள கருப்பு அவசர சட்டத்துக்கு எதிராக ராம்லீலா மைதானத்தில் மெகா பேரணி நடத்தப்படும் என்று ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.

டெல்லி அரசுக்கு அதிகாரிகள பணிநியமன அதிகாரம் அளித்து உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. இந்நிலையில், யூனியின் பிரதேச உயரதிகாரிகள் பணி நியமனம், பணியிட மாற்றத்துக்கு புதிதாக ஆணையம் அமைக்க மத்திய அரசு அண்மையில் அவசர சட்டம் பிறப்பித்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் மற்றும் மக்கள் ஆணையை அவமதிக்கும் செயலாகும் என்று ஆம் ஆத்மி குற்றம் சாட்டியது. மேலும், மத்திய அரசு அவசர சட்டத்துக்கு நிதிஷ் குமார் உள்ளிட்ட பல எதிர்க்கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில்,  கருப்பு அவரச சட்டத்திற்கு எதிராக ஜூன் 11ம் தேதி ராம்லீலா மைதானத்தில் மெகா பேரணி நடத்தப்போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. 

அதேசமயம், இந்த அவசர சட்டம் தொடர்பான மசோதாவை நாடாளுமன்ற மாநிலங்களவையில் தோற்கடிப்பதை உறுதி செய்வதற்காக நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்கும் பணியை அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கியுள்ளார். இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், டெல்லி மக்களின் உரிமைகளுக்காக நான் இன்று நாடு முழுவதும் எனது பயணத்தை தொடங்குகிறேன். டெல்லி மக்களுக்கு நீதி வழங்கும் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியது. அவரச சட்டம் கொண்டு வந்து அந்த உரிமைகளை மத்திய அரசு பறித்து விட்டது. இது மாநிலங்களவையில் வரும் போது, அது நிறைவேறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்காக அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆதரவு கேட்பேன் என்று தெரிவித்தார். 

மேலும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.  அதேவேளையில் இந்த விவகாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் அஜய் மாக்கன் குரல் கொடுத்துள்ளார்.  இது தொடர்பாக அஜய் மாக்கன் கூறுகையில், கெஜ்ரிவாலை ஆதரிப்பதன் மூலம், அம்பேத்கர், நேரு, சர்தார் படேல், லால் பகதூர் சாஸ்திரி போன்ற பல மரியாதைக்குரிய தலைவர்களின் முடிவுகளுக்கும், ஞானத்திற்கும் எதிராக போகிறோம் என்று தெரிவித்தார்.