×

நடைபயிற்சி சென்ற பெண்ணை தாக்கிய 15 நாய்கள்- பதைபதைக்க வைக்கும் வீடியோ

 

ஹைதராபாத்தில் நேற்று காலை சாலையில் நடைபயிற்சி மேற்கொண்ட பெண் ஒருவரை சுமார் 15 தெருநாய்கள் தாக்கின. மணிகொண்டாவில் உள்ள சித்ரபுரி மலைப்பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 

ஹைதராபாத்தில் சமீபகாலமாக தெருநாய்களின் தாக்குதலுக்கு குழந்தைகள் பலியாகி வருகின்றனர். கடந்த ஆண்டு டிசம்பரில், ஷேக்பேட்டை பகுதியில் உள்ள வினோபா நகர் பகுதியில் நாய் கடித்து ஐந்து மாத குழந்தை இறந்தது. பிப்ரவரி 2024-இல் ஷம்ஷாபாத்தில் தெருநாய் தாக்கியதில் ஒரு வயது குழந்தை பலியானது.

இந்நிலையில் ஹைதராபாத் மணிகொண்டாவில் உள்ள சித்ரபுரி மலைப்பகுதியில் சாலையில் நடை பயிற்சி மேற்கொண்டிருந்த பெண் ஒருவரை 15 தெரு நாய்கள் சூழ்ந்து கொண்டு கடித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காலை 6 மணியளவில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இது அப்பகுதியில் வசிப்பவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவில் நாய்கள் சூழ்ந்து கொண்டு தாக்கியதில் அப்பெண், கீழே விழுகிறார். பின்னர் காலில் உள்ள ஒரு செருப்பை பயன்படுத்தி வீரத்துடன் போராடி உயிர் பிழைத்த காட்சி காண்போரை பதைபதைக்க செய்கிறது.


இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள அப்பெண்ணின் கணவர், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழும் அபாயத்தைக் குறைக்க, காலனி வளாகத்திற்குள் தெரு நாய்களுக்கு உணவளிப்பதை நிறுத்துமாறு குடியிருப்பாளர்களை வலியுறுத்தியுள்ளார். நல்வாய்ப்பாக என் மனைவி உயிர் பிழைத்தாள், இந்த தெருநாய்களால் சிறு குழந்தைகள் இதே போன்ற தாக்குதல்களை எதிர்கொண்டால் என்ன செய்வது? எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.