"சிறப்பு லட்சுமி பூஜை" என்ற பெயரில் விபச்சாரம்- பல பெண்களின் வாழ்வை சூறையாடியா போலிச் சாமியார் கும்பல்
"சிறப்பு லட்சுமி பூஜை செய்தால் கோடி கோடியாகப் பணம் கிடைக்கும்" என்று ஆசை காட்டி, ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த இளம்பெண்களைச் சீரழித்து, பாலியல் தொழிலில் தள்ளிய மாநிலங்களுக்கிடையிலான போலி சாமியார் கும்பலை பெல்லாரி போலீசார் கைது செய்துள்ளனர். மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 4 இளம்பெண்கள் மீட்கப்பட்டுள்ளன.
காவி உடை அணிந்த முக்கிய நபரான போலிச் சாமியார் தலைமறைவான நிலையில், தேடுதல் வேட்டை தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்த கும்பலுக்கு திருமணமாகாத, ஏழைப் பெண்களே இலக்கு. பழைய வீட்டின் சிறிய அறையில் சிவன்-பார்வதி படம், கற்பூர தீபத்துடன் போலி பூஜை நடத்தி நாடகம் நடத்தப்படுகிறது. "பூஜையால் கிடைக்கும் பணத்தை மூன்றாகப் பிரிப்போம்: பெண்ணுக்கு ஒரு பங்கு, அறிமுகப்படுத்திய ஏஜென்டுக்கு ஒரு பங்கு, சாமியாருக்கு ஒரு பங்கு" என்று நம்ப வைத்துள்ளனர்.
பூஜை என்ற பெயரில் பாலியல் சுரண்டல், பின்னர் வற்புறுத்தி பாலியல் தொழிலில் தள்ளுதல் என போலி சாமியார்களின் அராஜகம் உச்சக்கட்டம் என போலீசார் தெரிவிக்கின்றனர். பெல்லாரி காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் சுமன் டி. பென்னேகர் தலைமையில் சிறப்பு நடவடிக்கை நடைபெற்றது. 'அக்கா படை' பெண் போலீசார் ஏழைப் பெண்களாக வேடமிட்டு கும்பலுக்குள் ஊடுருவி, சுமார் இரண்டு மாதங்கள் ரகசியமாகத் தகவல்களையும் ஆதாரங்களையும் திரட்டினர்.
இந்தக் கும்பல் பெல்லாரியுடன் நிற்காமல், சிக்கமகளூரு, மைசூரு மற்றும் ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டம் வரை செயல்பட்டுள்ளது. மேலும் பல பெண்கள் பாதிக்கப்பட்டார்களா என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.
சுயபுராணம் பேசும் சாமியார்கள், மந்திரவாதிகளை நம்பாதீர்கள் என அறிவுறுத்தியுள்ள போலீசார், ஒரே இரவில் பணக்காரர் ஆக்குவதாகச் சொல்லும் பூஜைகள், அமானுஷ்ய சக்திகள் என்பவை அனைத்தும் மோசடியே. சந்தேகத்திற்குரிய செயல்பாடுகளைக் கண்டால் உடனே காவல்துறைக்குத் தகவல் கொடுங்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.