பள்ளிக்குள் புகுந்து காதலியை சுட்டுக்கொன்ற காதலன்
உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் பள்ளிக்குள் புகுந்து குழந்தைகளின் கண்முன்னே பெண் ஆசிரியை ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சதர் கோட்வாலி பகுதியின் கீழ் உள்ள ஹிதாயத் நகர் பகுதியைச் சேர்ந்தவர் 26 வயதான நிஷாத் பாத்திமா. இவரும், 28 வயதான முகமது சவுத் என்பவரும் காதலித்ததாகவும், பாத்திமா சமீபத்தில் அந்தக் காதலை முறித்துக்கொண்டதாகவும் காவல்துறை கூறுகிறது. நிஷாத் சில்ட்ரன்ஸ் அகாடமி பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று (21-9-2026)ஆம் தேதி பாத்திமாவைச் சந்திப்பதற்காக பள்ளி வளாகத்திற்கு வந்த சவுத், அங்கு இருந்த குழந்தைகளின் கண்முன்னே அவரைச் சுட்டதாக கூரப்படுகிறது. பின்னர் போலீசாரால் கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தில், குற்றம் சாட்டப்பட்டவர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துகொண்டார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்தத் துப்பாக்கிச் சூடு மாணவர்களையும் பள்ளி ஊழியர்களையும் பீதியில் ஆழ்த்தியது. இச்சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், நேரில் பார்த்தவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பாத்திமா தன்னுடன் பேசியதை நிறுத்தியதால் ஆத்திரமடைந்து சவுத் இச்செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.