×

மாநில அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய பாஜகவினர் மீது தடியடி

 

பஞ்சாப் மாநிலத்தில் அரசுக்கு எதிராக  போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். 

பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மி அரசு நம்பிக்கை தீர்மானத்தை கொண்டு வருவதற்காக சட்டப் பேரவையின் சிறப்பு கூட்ட தொடர் நடத்த முடிவு செய்கி இருந்தது. ஆனால் அம் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்றைய தினம் சட்டமன்ற கூட்ட தொடர் நடத்துவதற்கான முடிவை திரும்ப பெற்று விட்டார். ஆளுநரின் இந்த செயல் ஜனநாயகத்தின் குரல்வளைய  நெரிக்க கூடிய செயல் என்ற குற்றம் சாட்டிய பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், இன்று காலை நடைபெற்ற பஞ்சாப் மாநில அமைச்சரவை கூட்டத்தில் வரும் 27ஆம் தேதி பஞ்சாப் மாநில சிறப்பு கூட்ட தொடர் நடத்த முடிவு செய்துள்ளார். இந்நிலையில்,  ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநர் மாளிகை நோக்கி அமைதிப் பேரணி நடத்த முயன்றனர். அப்போது பாதுகாப்பு காரணங்களுக்காக சட்டமன்ற உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். 

இதேபோல், பஞ்சாப் மாநில அரசை கண்டித்தும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக கூறி பாரதிய ஜனதா கட்சியினர் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த்மான் இல்லம் நோக்கி பேரணி நடத்த முற்பட்டனர். பாதுகாப்பு காரணங்களால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்திய போது பாரதிய ஜனதா கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் பாரதிய ஜனதா கட்சியினரை கட்டுப்படுத்த லேசான தடியடி நடத்தி தண்ணீரை பீய்ச்சி அடித்து அப்புறப்படுத்தினர்.  இதன் காரணமாக சண்டிகர் மாநிலத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.