×

தடை செய்யப்பட்ட வார்த்தைகளை தான் பயன்படுத்துவேன் - திரிணாமுல் எம்.பி. ஆவேசம்

 

மக்களவை,  மாநிலங்களவையில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ள நிலையில், தடை செய்யப்பட்ட வார்த்தைகளை தான் பயன்படுத்துவேன் என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., டெரிக் ஓ பிரைன் தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்ற  மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 18-ந்தேதி தொடங்குகிறது. இந்தநிலையில் மக்களவை,  மாநிலங்களவை என இரு அவைகளிலும்  பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டிருக்கிறது. அந்தப் பட்டியலில்   ஆங்கிலம் மற்றும் இந்தி வார்த்தைகள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன.  அதாவது, “வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், ஊழல், ஒட்டுகேட்பு ஊழல், கொரோனா பரப்புபவர், வாய்ஜாலம் காட்டுபவர், நாடகம், கபட நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், சர்வாதிகாரி, அழிவு சக்தி, காலிஸ்தானி ஆகிய வார்த்தைகள் பயன்படுத்தக் கூடாத  வார்த்தைகளாக சேர்க்கப்பட்டுள்ளன. மக்களவை செயலகத்தின் இந்த அறிவிப்பிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., டெரிக் ஓ பிரைன் கூறியதாவது:, கூட்டத்தொடர் இன்னும் சில நாட்களில் துவங்குகிறது. நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தும்போது இந்த அடிப்படை வார்த்தைகளை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என எம்.பி.,க்களுக்கு உத்தரவிட்டுள்ளனர். தடை செய்யப்பட்ட இந்த வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்துவேன், என்னை சஸ்பெண்ட் செய்யுங்கள். ஜனநாயகத்திற்காக போராடுவோம். இவ்வாறு கூறியுள்ளார்.