×

ரஷ்யா-உக்ரைன் போர்.. கிடுகிடுவென சரிந்த பங்குச்சந்தை - இந்தியாவை சூளும் அபாயம்!

 

உலக நாடுகள் எது நடக்கக் கூடாது என அஞ்சினார்களோ அது இன்று தொடங்கிவிட்டது. அதற்கான விஷ விதையை ரஷ்யா போட்டுள்ளது. கடந்த சில நாட்களாக உக்ரைன் எல்லைகளில் ராணுவ வீரர்களையும் ராட்சத ஆயுதங்களையும் ரஷ்யா நிலைநிறுத்தி வந்தது. அதேபோல போர் பயிற்சியையும் மேற்கொண்டிருந்தது. குறிப்பாக ஏவுகணைகளை ஏவும் அமைப்புகளும் தயார் நிலையில் வைத்திருந்தது. சாட்டிலைட் மூலம் இவையனைத்தும் அம்பலமாகி போனது. உக்ரைனை தொட கூடாது என ரஷ்யாவுக்கு அமெரிக்கா மற்றும ஐரோப்பிய நாடுகள் எச்சரிக்கை விடுக்க, எந்த தாக்குதலும் வேண்டாம்.. பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளுங்கள் என ஐநா சபை வேண்டுகோள் விடுத்தது.

ஆனால் ரஷ்ய அதிபர் புடின் எதையும் மதிக்காமல் "நான் பிடித்த முயலுக்கு மூனு காலு தான்" என்பது போல உக்ரைன் மீது போர் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளார். ரஷ்யா அளவிற்கு இல்லையென்றாலும் கிழக்கு ஐரோப்பாவில் ரஷ்யாவுக்கு அடுத்த இடத்தில் இருப்பது உக்ரைன் தான். இரு நாடுகளும் சக்திவாய்ந்த மிக மிக ஆபத்தான அணு ஆயுதங்களை தன்னகத்தே கொண்டுள்ளன. ஒருவேளை போர் முற்றி அணு ஆயுதங்கள் உபயோகிக்கப்பட்டால் இந்த உலகம் பேரழிவில் சிக்குவதை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது. உக்ரைனுக்கு தானே பேரழிவு, உலகிற்கு ஏன் பேரழிவு என நீங்கள் நினைக்கலாம்.

இங்கே தான் உலகப் பொருளாதாரம் ஹைலைட் பெறுகிறது. போர் என்று வந்துவிட்டால் பெட்ரோல், டீசலின் மூலப் பொருளான கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை கன்னாபின்னாவென்று உயரும். அதற்கு நேரெதிராக ஒரு நாட்டின் பங்குச்சந்தையும் அந்நாட்டின் பண மதிப்பும் மிகப்பெரிய சரிவைச் சந்திக்கும். குறிப்பாக மாய பணமாக கருதப்படும் கிரிப்டோகரன்சியின் வீழ்ச்சி அசுர வேகத்தில் இருக்கும். பல்வேறு நாடுகளின் பொருளாதாரம் அடிபடும். கச்சா எண்ணெய்யின் விலை உயரும்போது பெட்ரோல்,டீசல் விலையும் உயரும். அதன் விலை உயர்ந்தால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து பணவீக்கம் உண்டாகும்.

ஏற்கெனவே கொரோனா காரணமாக பொருளாதாரம் அடிவாங்கியிருக்கும் சூழலில் இந்த அடியும் சேர்த்து விழுந்தால், எழுந்து நிற்க பல ஆண்டுகள் ஆகலாம். அப்படியான ஒரு சூழலில் தான் இந்தியா சிக்கியிருக்கிறது. ரஷ்யாவில் போர் பதற்றம் ஆரம்பித்த உடனே இங்கே பங்குச்சந்தையின் ஸ்திரத்தன்மை சீர்கெட்டு போனது. ஒருவித அச்சத்துடனே முதலீட்டாளர்கள் முதலீடு செய்தனர். இன்று போர் தொடங்கிவிட்டதால் ஒரே நாளில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,366 புள்ளிகள் சரிந்துவிட்டது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 572 புள்ளிகள் சரிந்து வர்த்தகமாகி வருகிறது. போர் நிற்கும் வரை இந்தச் சரிவும் நிற்காது என்பது உள்ளங்கை நெல்லிக்கணி. அந்த வகையில் முதலீட்டாளர்களின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது ரஷ்யா-உக்ரைன் போர்.