×

நாளை சபரிமலை நடை திறப்பு; கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம்

 

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜையின் போது கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


சரிபலை ஐயப்பன் கோயில் மண்டல, மகரவிளக்கு பூஜை தவிர தமிழ் மாதப் பிறப்பையொட்டி முதல் 5 நாள்கள் நடை திறக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை (நாளை) 16-ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தொடர்ந்து 21-ம் தேதி வரை 5 நாள்கள் பூஜைகள் நடைபெறும்.  இந்த நாள்களில் தினமும் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், உஷபூஜை, உச்ச பூஜைக்கு பின் மதியம் 1 மணியளவில் நடை அடைக்கப்படும். மீண்டும் மாலை 5 மணிக்கு  நடை திறக்கப்பட்டு தீபாராதனை அபிஷேகம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு அரிவராசனம் பாடி கோயில் நடை அடைக்கப்படும். 

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு குறிப்பிட்ட அளவில் ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.  இந்த ஆண்டு சபரிமலை மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்கான முன்னேற்பாடுகள் குறித்த தேவசம்போர்டு உயர்மட்ட கூட்டம் அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. அப்போது மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜையின் போது கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு அனைத்து பக்தர்களும் தரிசனத்திற்கு அனுமதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.