×

சபரிமலை : நெய் அபிஷேக வழிபாடு இன்று நிறைவு

 

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நெய் அபிஷேக வழிபாடு இன்றுடன்  நிறைவு பெறுகிறது. 


மண்டல,  மகர விளக்கு பூஜைக்காக நவம்பர் 16ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப் பட்டது. இதையடுத்து தினமும் ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்து வந்தனர்.  நேற்று முன்தினம் மாளிகைபுரம் மண்டபத்தில் இருந்து சபரிமலை ஐயப்பன் பதினெட்டாம்படிக்கு பவனி செல்லும் நிகழ்வு நடைபெற்றது.  

இந்நிலையில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் நெய் அபிஷேக வழிபாடு இன்றுடன் நிறைவடைகிறது.  சாமி தரிசனத்திற்கு நாளை வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது என்று வழங்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. அத்துடன் நடப்பு சீசனின் கடைசி நெய்  அபிஷேகம் இன்றுடன் நிறைவடைகிறது.  தங்க ஆபரணத்தில் ஜொலிக்கும் ஐயப்பனை தரிசிக்க இன்றே கடைசி நாள்.  இதனால் சபரிமலையில் அதிக அளவில் பக்தர்கள் குவிந்துள்ளனர். 

சபரிமலையில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 1:30 மணிக்கு நடை அடைக்கப்படும் . பின்னர் மீண்டும் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11:30 மணி வரைக்கும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர்.  இன்று முதல் தரிசன நேரம் குறைக்கப்பட்டு அதிகாலை ஐந்து மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம்  1 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது.  மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு மீண்டும் இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை மறுநாள் அதிகாலை 5.30  மணிக்கு திறக்கப்பட்டு காலை 6:30 மணிக்கு நடை அடைக்கப்படும்.  அன்றைய  தினத்தில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மீண்டும் மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடுத்த மாதம் 12ஆம் தேதி திறக்கப்படும்.  சபரிமலையில் நடப்பு சீசனில் மட்டும் 48 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டுள்ளனர் . இன்னும் இரண்டு தினங்கள் உள்ள நிலையில் மேலும் 2 லட்சம் பேர் தரிசனம் செய்ய வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.