×

"ஒரு இன்ச் கூட ஆக்கிரமிக்காத உலகின் ஒரே நாடு இந்தியா தான்"  - ராஜ்நாத் சிங் பெருமிதம்!

 

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இதனையொட்டி எந்தெந்த நாடுகள் மற்ற நாடுகளுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து ஆக்கிரமித்துள்ளன என்பது போன்ற விவாதம் எழுந்துள்ளது. ஒரு நாடு இன்னொரு நாட்டுக்குள் அத்துமீறி நுழைவது இது முதன்முறை அல்ல. அமெரிக்கா தான் இதில் ஜித்து ஜில்லாடி. அமெரிக்கா கால் வைக்காத இடமில்லை எனலாம். இது அமெரிக்காவுக்கு பெருமை இல்லை. அதன் புகழுக்கு இழுக்கு என்றே சொல்ல வேண்டும். அன்று இந்தியாவை பிரிட்டிஷ் படைகள் காலனியாக்கி வளங்களைச் சுரண்டியது. 

கிட்டத்தட்ட அதேபோன்றதொரு மோசமான செயலை தான் அமெரிக்கா பன்னெடுங் காலமாக அரங்கேற்றி வருகிறது. சிரியா, ஆப்கானிஸ்தான், லிபெரியா, குவைத், சோமாலியா என அந்த லிஸ்ட் பெரியது. ரஷ்யாவும் உக்ரைனுக்கு முன்பாகவே ஒருசில நாடுகளில் ஊடுருவியுள்ளது. அண்டை நாடான கிரிமீயாவை தன்னுடன் இணைத்துக் கொண்டுள்ளது. ஆனால் அமெரிக்கா அளவிற்கு அல்ல. சீனாவைப் பொறுத்தவரை இந்தியாவில் அத்துமீற முயற்சித்துக் கொண்டே இருக்கிறது. தைவான், திபெத் ஆகியவற்றை அச்சுறுத்தியும் வருகிறது. 

ஆனால் இந்தியா இதுபோன்று எந்தவொரு நாட்டையும் ஆக்கிரமித்ததே இல்லை என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்துள்ளார். டெல்லி பல்கலைக்கழகத்தின் 98-வது பட்டமளிப்பு விழாவில் பேசிய அவர், "இந்தியாவை சக்திவாய்ந்த நாடாகவும் அறிவாற்றல் மிக்க தேசமாகவும் மாற்ற விரும்புகிறோம். மாறாக மற்ற நாடுகளை ஆக்கிரமிப்பதில் விருப்பம் இல்லை. வேறு எந்த நாட்டையும் தாக்கி, ஓர் அங்குல நிலத்தைக் கூட ஆக்கிரமிக்காத உலகின் ஒரே நாடு இந்தியா மட்டுமே. இதனை நாம் பெருமையாக சொல்லி கொள்ளலாம். அறிவியல் துறையில் இந்தியா முன்னணி நாடாக விளங்கியது.

பூஜ்ஜியம் என்ற கருத்துரு இந்தியாவிலிருந்து தான் சென்றது. பித்தாகரஸ் தேற்றத்தை பித்தாகரஸ் கூறுவதற்கு 300 ஆண்டுகளுக்கு முன்பே போதயானா கூறினார். இயேசு பிறப்பதற்கு முன்பே நம் நாட்டில் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன” என்றார். என்ன தான் இந்தியா மற்ற நாடுகளை ஆக்கிரமிக்கா விட்டாலும் இந்தியாவை சீனாவும் பாகிஸ்தானும் அபகரிக்க துடிப்பதை எவராலும் மறக்க முடியாது. அதேபோல பாஜகவின் முக்கிய கொள்கையில் பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களை அகண்ட பாரதம் கொள்கையும் இங்கே நினைவுகூரத்தக்கது.