×

வெள்ளி பதக்கம் வென்ற மகாதேவ் சர்காருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

 

காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை வென்று தந்துள்ள சங்கேத் மகாதேவ் சர்காருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 
 

22வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது. 72 நாடுகளில் இருந்து 5000 விளையாட்டு வீரர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.  இந்தியாவிலிருந்து மொத்தம் 19 பிரிவுகளில் 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர். இன்று நடைபெற்ற பளுதூக்கும் போட்டியில் 55 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவை சேர்ந்த சங்கேத் மகாதேவ் சர்கார் வெள்ளிப் பதக்கம் வென்றார். 55 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவை சேர்ந்த சங்கேத் மகாதேவ் சர்கார் மொத்தம் 248 கிலோ எடையை தூக்கி இரண்டாவது இடத்தை பிடித்தார். இதன் மூலம் அவர் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். 


இந்த நிலையில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள சங்கேத் மகாதேவ் சர்காருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், சங்கேத் சர்காரின் சிறப்பான முயற்சி! காமன்வெல்த் போட்டியில் மதிப்புமிக்க வெள்ளிப் பதக்கத்தை அவர் வென்றிருப்பது இந்தியாவுக்கு ஒரு சிறந்த தொடக்கமாகும். அவருக்கு வாழ்த்துக்கள் மற்றும் அனைத்து எதிர்கால முயற்சியாளர்களுக்கும் வாழ்த்துக்கள். இவ்வாறு தெரிவித்துள்ளார்.