×

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திர சூட் பதவியேற்பு - பிரதமர் மோடி வாழ்த்து

 

உச்சநீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள டி.ஒய்.சந்திர சூட்டிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பணியாற்றி வந்தார். இவரது பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து தலைமை நீதிபதி யு.யு.லலித் தனக்கு அடுத்த தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட்டை கடந்த மாதம் 11-ந்தேதி மத்திய அரசுக்கு பரிந்துரைத்தார். இதனை தொடர்ந்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, கடந்த மாதம் 17-ந்தேதி டி.ஒய்.சந்திரசூட்டை தலைமை நீதிபதியாக நியமித்து உத்தரவிட்டார். இந்நிலையில், புதிய நீதிபதி பதவியேற்பு விழா டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்றது. இதில், உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திர சூட் பதவியேற்றார். புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவர் 2024-ம் ஆண்டு நவம்பர் 10-ந்தேதி வரை பொறுப்பு வகிப்பார்.  

இந்தநிலையில், உச்சநீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக பதவியேற்ற டி.ஒய்.சந்திரசூட்டிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்தியாவின் தலைமை நீதிபதியாக பதவியேற்ற டாக்டர் டிஒய் சந்திரசூட் அவர்களுக்கு வாழ்த்துகள். அவரது பதவிக்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். உச்சநீதிமன்ற நீதிபதிகளின் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்வது வழக்கம். ஆனால் இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்ளாதது குறிப்பிடதக்கது.