×

ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் நிறைவு.. 300 யூனிட் மின்சாரம் இலவசம்..-  பஞ்சாப் அரசு அதிரடி..

 

பஞ்சாபில் ஜூலை 1 ஆம் தேதி முதல் வீடுகளுக்கு 300 யூனிட்  மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.  

 பஞ்சாப் மாநிலத்தில் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி வகித்து வருகிறது.  மொத்தம் உள்ள 117 இடங்களில் 92 இடங்களில் வெற்றி பெற்று  தனிப்பெரும்பான்மையுடன்  ஆட்சியைக் கைப்பற்றிய ஆம் ஆத்மி அரசு. அதனைத்தொடர்ந்து கடந்த மாதம் 16 ஆம் தேதி முதல்மைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட பகவந்த் மான்,  முதல் அமைச்சரசைக் கூட்டத்தில்  25 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என அறிவித்தார். இந்நிலையில் இன்று ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் நிறைவு பெற்றதை அடுத்து, அனைத்து வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

ஏற்கனவே பஞ்சாப் மாநிலத்தில் பட்டியல்  இனத்தவர்கள், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு  200 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.  இந்த நிலையில் கடந்த செவ்வாய் கிழமையன்று  பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலை நேரில் சந்தித்து பேசினார். அப்போது 300 யூனிட்டுகள்  இலவச மின்சாரம் வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.  அதனைத் தொடர்ந்து  கடந்த வியாழன் அன்று ஜலந்தரில் செய்தியாளர்களிடம் பேசிய  அவர், இன்று ( ஏப் 16 ) நல்ல செய்தி அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தார்.  ஆகையால்  இதுகுறித்த  அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

முன்னதாக பஞ்சாப் மாநிலத்தின் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை சார்பில் பல்வேறு நாளிதழ்களில்  இதுகுறித்து விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. அத் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ஒவ்வொரு வீட்டிற்கும் ஜூலை 1 முதல் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று   வெளியாகும் என கூறப்பட்டிருந்தது. மேலும் ஜூலை 1 ஆம் தேதி முதல்  இந்த திட்டம் அமலுக்கு வர உள்ளதாகவும்  கூறப்பட்டுள்ளது.   இதன் மூலம் இதுவரி இலவச மின்சாரம் பெற்று வரும் பட்டியல் இனத்தவர்கள், பிறபடுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் மற்றும்  வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் அனைவரும் இனி 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் பெறுவர்.  அவர்கள் 300 யூனிட்டுக்கு  மேல் பயன்படுத்தினால்,  கூடுதல் யூனிட்டுக்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.