முதல்வர் சென்ற படகு விபத்தில் சிக்கியதால் பரபரப்பு..
Oct 16, 2022, 13:29 IST
கங்கை நதியில் ஆய்வு செய்ய சென்ற பிஹார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் சென்ற படகு பாலத்தின் தூணில் மோதி விபத்துக்குள்ளானது.
பீகார் மாநிலம் பாட்னா அருகே கங்கை நதியில் கொண்டாடப்படவிருக்கும் சாத் பூஜையை முன்னிட்டு, அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் நேரில் ஆய்வு செய்வதற்காக சென்றார். அவருடன் அதிகாரிகள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் உள்ளிட்ட பலர் படகில் சென்றனர்.
சாத்காட் பகுதியில் ஆய்வு மேற்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக, திடீரென படகு அங்கிருந்த ஜேபி சேது பாலத்தின் தூணில் மோதியது. படகு லேசாக மோதி நின்றதால். விபத்தில் பெரிய பாதிப்பு ஏதும் நேர்ந்துவிடவில்லை. அத்துடன் நல்வாய்ப்பாக படகில் பயணித்த முதலமைச்சர் நிதிஷ்குமார் மற்றும் அதிகாரிகள் காயம் இன்றி தப்பினர். படகு விபத்தால் அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியது.