×

"பொய்.. பொய்.. நான் அப்டி சொல்லவே இல்ல".. அலறிய நிர்மலா சீதாராமன் - திடீர்னு ஏன் இந்த பதற்றம்!

 

உக்ரைன் நாட்டில் ரஷ்யா போர் தொடுத்திருப்பது உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்நாட்டு மக்களுக்கே அங்கே பாதுகாப்பு இல்லை. மெட்ரோ ரயில் நிலையங்களிலும் சுரங்கப் பாதையிலும் பதுங்கியுள்ளனர். எந்நேரம் ரஷ்யா தாக்கும். ஒருவேளை உயிர் போய்விடுமோ என்ற அச்சத்தில் அவர்கள் உறைந்துள்ளனர். இவர்களின் நிலையே இப்படியென்றால் பணி நிமித்தமாகவும் படிப்பிற்காகவும் அங்கு சென்றவர்களின் நிலை மிகவும் பரிதாபகரமானதாக மாறியிருக்கிறது. குறிப்பாக இந்தியாவைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் அங்கே அடுத்த வேளை உணவு கூட கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.

இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் அடக்கம். உக்ரைன் தன் வான் எல்லையை மூடியிருப்பதால் அங்கே விமானங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியர்களை மீட்பதில் கடுமையான சிக்கல் எழுந்துள்ளது. இருப்பினும் பல்வேறு வழிகளை யோசித்து அதன்மூலம் அவர்களை மீட்டு வர மத்திய அரசு முயற்சித்து வருகிறது. மாநில அரசுகளும் வலியுறுத்தி வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாடு மற்றும் கேரள மாநில அரசுகள், உக்ரைனிலிருந்து வரும் அனைத்து தமிழர்களின் பயணச் செலவையும் தாமே ஏற்பதாக அறிவித்துள்ளன. 

நேற்று உக்ரைனிலிருந்து 5 தமிழர்கள் உட்பட 219 இந்தியர்கள் தாயகம் திரும்பினர். அவர்களை மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் வரவேற்றார். இன்னும் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் அங்கே சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இச்சூழலில் இதுகுறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக ஒரு சர்ச்சை கருத்து இணையத்தில் நேற்று வைரலானது. உக்ரைனிலுள்ள இந்தியர்களை மீட்பதில் ஏன் தாமதம் என நிரூபர்கள் கேட்ட கேள்விக்கு அவர், "சொந்த நாட்டில் படிக்காமல் உக்ரைன் சென்று படித்தால் அவர்களை என் தோளிலா பறந்துகொண்டு வர முடியும்?" என சொன்னதாகக் கூறப்பட்டது.


தனியார் ஊடகமான புதிய தலைமுறை அந்தச் செய்தியைப் பதிவிட்டதாகக் கூறி அதன் லோகோ மற்றும் டெம்ப்ளெட் பயன்படுத்தப்பட்டிருந்தது. இது இணையம் முழுவதும் தீயாக பரவி நிர்மலா சீதாராமனை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தனர். இது அவரின் கவனத்துக்குச் செல்லவே தான் அப்படியொரு கருத்தை சொல்லவே இல்லை என்று தெளிவுப்படுத்தியுள்ளார். மேலும் தனது ட்விட்டரில், புதிய தலைமுறை சானலை டேக் செய்து, "இது என்ன?
இது எங்கிருந்து வந்தது? பொய்! இப்படி ஒரு கேள்வி-பதில் நிகழவில்லை" என கேள்வியெழுப்பியிருந்தார். இதனையடுத்து இது தாங்கள் வெளியிட்ட செய்தி அல்ல என புதிய தலைமுறை ஊடகம் விளக்கமளித்துள்ளது.