×

10 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை அடுத்த சில ஆண்டுகளில் ஏற்படுத்துவோம்- மோடி

 

நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை அடுத்த சில ஆண்டுகளில் ஏற்படுத்த அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று அசாம் மாநிலத்தில் நடந்த பேரணியில் பிரதமர் மோடி பேச்சியுள்ளார்.

இரண்டு நாள் பயணமாக அசாம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அசாம் மாநிலம் திபுவில் கால்நடை மருத்துவக் கல்லூரி, மேற்கு கர்பி ஆங்லாங்கில் உள்ள பட்டப்படிப்பு கல்லூரி மற்றும் கொலோங்காவில் விவசாயக் கல்லூரி உள்ளிட்ட சுகாதாரம் மற்றும் கல்வி தொடர்பான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.  மேலும், திபுவில் அமைதி, ஒற்றுமை, வளர்ச்சி பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். 

அப்போது பேசிய அவர், மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி உள்ள மாநில மக்கள்  வளர்ச்சி, நம்பிக்கை மற்றும் முயற்சி என்ற உணர்வோடு செயல்படுகின்றனர். 2021ம் ஆண்டில் கர்பி அங்லாங்க் பகுதியில் இருந்து பல்வேறு அமைப்புகள் அமைதி மற்றும் வளர்ச்சிக்கான திட்டத்தில் இணைந்தன. குறிப்பாக  "போடோ ஒப்பந்தம்-2020" நீடித்த அமைதிக்கான புதிய வழிகளை ஏற்படுத்தியது என்றார். சிறந்த சட்டம் ஒழுங்கு காரணமாக வடகிழக்கு மாநிலங்களில் பல பகுதிகளில் இருந்து ஆயுதப்படை சிறப்பு அதிகாரம் நீக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பாக அசாம் மாநிலத்தின் 23 மாவட்டங்களில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரம் நீக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். "அனைவருக்கும்! அனைவருக்குமான வளர்ச்சி!!" என்ற உணர்வோடு எல்லை தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு வருவதாகவும், அசாம்-மேகாலயா இடையே சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட எல்லை ஒப்பந்தம் என்பது மற்ற மாநிலங்களுக்கும் பெரும் ஊக்குவிப்பாக அமையும் என நம்பிக்கை தெரிவித்தார். 

அசாம் மாநிலத்தில் 2,600க்கும் மேற்பட்ட இடங்களில் நீர்வாழ்விடங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக ஏரிகள் முற்றிலும் மக்களால் சீர்படுத்தப்பட்டு வருகிறது என்றும் இத்தகைய செயல்கள் பழங்குடியின சமுதாயத்தில் மிக பெரிய வளர்ச்சியை ஏற்படுத்தும். மேலும், இந்த திட்டம் என்பது கிராமங்களில் நீர் இருப்பை உறுதி செய்யும் எனவும் தெரிவித்தார்.  2014ம் ஆண்டு முதல் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சி அடைந்து வருவதாகவும், இன்று ஒருவர் அசாம் பழங்குடியின பகுதிகளுக்கு செல்லும் போது வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை காண முடிகிறது. மேலும், பழங்குடி சமூகத்தின் கலாச்சாரம், அவர்களின் மொழி, உணவு, கலை மற்றும் கைவினைப்பொருட்கள் என அனைத்தும் இந்தியாவின் செழுமையான பாரம்பரியம் ஆகும்; அதன் வகையில் அசாம் மாநிலம் செழிப்பாக உள்ளது என்றார். கடந்த 10 ஆண்டுகளில் நம்மால் செய்ய முடியாத வளர்ச்சி அடுத்த சில ஆண்டுகளில் செய்து முடிக்க அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என அழைப்பு விடுத்தார்.