×

உத்தரகாண்டில் திடீர் நிலநடுக்கம்.. கிடுகிடுவென அதிர்ந்த வீடுகள் - அலறிய மக்கள்!

 

இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே பெரும்பாலான வட மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.1ஆக பதிவாகிய இந்த நில அதிர்வால் உயிரிழப்புகளோ பொருள் இழப்புகளோ எதுவும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. உத்தரகாசியிலிருந்து கிழக்கே 39 கிமீ தொலைவில் தெஹ்ரி கர்வால் பகுதியில் அதிகாலை 5.03 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 

அதிகாலை சுமார் 5 மணியளவில் ஏற்பட்ட இந்த லேசான நில நடுக்கத்தால் வீடுகள் கிடுகிடுவென அதிர்ந்து பொருட்கள் சிதறி விழுந்தன. இதனால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு அலறியடித்து வெளியேறினர். நாளை மறுநாள் அம்மாநிலத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களைக் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த வாரம் உத்தரகாண்ட் மாநிலத்தின் சில பகுதிகளில் ஏற்கெனவே நிலநடுக்கம் உணரப்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 3.6ஆக பதிவான லேசான நிலநடுக்கமே.


அதேபோல ஜம்மு-காஷ்மீர், டெல்லி மாநிலங்களிலுள்ள பகுதிகளில் பிப்ரவரி 5ஆம்தேதி கடும் நில அதிர்வு ஏற்பட்டது. எனினும், இந்த நில அதிர்வால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.  தேசிய புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, ஆப்கானிஸ்தான் - தஜிகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதிகளில் காலை 9.45 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் தாக்கம் தான் காஷ்மீர், டெல்லி வரை எதிரொலித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.