×

நீங்க உங்க வேலையை பாருங்க, எங்களை எங்க பணியை செய்ய அனுமதிங்க.. துணைநிலை கவர்னருக்கு கடிதம் எழுதிய சிசோடியா

 

டெல்லியில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பை அரசியலமைப்பு உங்களுக்கு வழங்கியுள்ளது. நீங்கள் எங்கள் வேலையை செய்ய அனுமதிக்க வேண்டும், உங்கள் நேரத்தை நகரத்தில் சட்டம் ஒழுங்கை மேம்படுத்த பயன்படுத்தவும் என்று டெல்லி துணைநிலை கவர்னருக்கு கல்வி துறை அமைச்சர் மணிஷ் சிசோடியா கடிதம் எழுதினார்.


டெல்லி யூனியன் பிரதேசத்தின் துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனா கடந்த வெள்ளிக்கிழமையன்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எழுதிய கடிதத்தில், 2012-13ல் 70.73 சதவீதமாக இருந்த அரசு பள்ளிகளில் மாணவர்களின் சராசரி வருகை பதிவு ஒவ்வொரு ஆண்டும் குறைந்து 2019-20ல் 60.65 சதவீதமாக குறைந்துள்ளது. தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளுக்கு இடம் பெயரும் மாணவர்கள் தொடர்பான ஆம் ஆத்மியின் கூற்றுகள் குறித்தும் கேள்வி எழுப்பி ஆத் ஆத்மி அரசாங்கத்தை விமர்சனம் செய்து இருந்தார். இதனையடுத்து டெல்லி துணைமுதல்வரும், கல்வி துறை அமைச்சருமான மணிஷ் சிசோடியா துணைநிலை கவர்னர் வி.கே. சக்சேனாவுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் மணிஷ் சிசோடியா கூறியிருப்பதாவது: 

டெல்லி துணைநிலை கவர்னரின் குற்றச்சாட்டுகள் டெல்லி மாணவர்களையும் ஆசிரியர்களையும் அவமதிக்கும் வகையில் உள்ளது. கல்வித்துறையில் அற்புதங்களை செய்த எங்கள் ஆசிரியர்களின் பணியை கேலி செய்ய வேண்டாம் என்று நான் துணைநிலை கவர்னரிடம் கேட்டுக் கொள்கிறேன். டெல்லியில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 16 லட்சத்தில் இருந்து 15 லட்சமாக குற்றம் சாட்டி உள்ளீர்கள். ஆனால் மாணவர்களின் எண்ணிக்கை 18 லட்சமாக அதிகரித்துள்ளது என்பதுதான் உண்மை. பள்ளிகளின் உள்கட்டமைப்பையும் நமது கல்வித்துறை மாற்றியமைத்துள்ளது. 

ஆம் ஆத்மி அரசு கடந்த ஏழு ஆண்டுகளில் மத்திய அரசு மற்றும் அடுத்தடுத்த துணைநிலை கவர்னர்களின் தடைகளை மீறி கல்வித்துறையில் அனைத்து பணிகளையும் செய்துள்ளது. டெல்லியின் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக, டெல்லி அரசாங்கத்தின் பணிக்கு இடையூறு விளைவிக்காமல் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். டெல்லியில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பை அரசியலமைப்பு உங்களுக்கு வழங்கியுள்ளது. நீங்கள் எங்கள் வேலையை செய்ய அனுமதிக்க வேண்டும், உங்கள் நேரத்தை நகரத்தில் சட்டம் ஒழுங்கை மேம்படுத்த பயன்படுத்தவும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.