×

மங்களூரு குண்டுவெடிப்பு- போலி ஆதார் எண்ணுடன் பயணித்த தீவிரவாதி! பின்னணி

 

கர்நாடக மாநிலம் மங்களூரு நகரில் கனகன்டி காவல்நிலையம் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் நேற்று மாலை 5.15 மணியளவில் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ திடீரென வெடித்து அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. 

இந்த குண்டு வெடிப்பு குறித்து காவல்துறை விசாரணை நடத்திய போது குண்டு வெடித்த ஆட்டோவில் இருந்த குக்கர் ஒன்றை கைப்பற்றினர். இந்த குக்கரில் வெடிபொருள் கொண்டுவரப்பட்டபோது குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது தெரியவந்துள்ளது. இது திட்டமிட்ட தீவிரவாத தாக்குதல் என கர்நாடக டிஜிபி பிரவீன் சூத் தெரிவித்துள்ளார். ஆட்டோவில் பயணித்த பயணி மற்றும் ஆட்டோ ஓட்டுனர் இருவரும் படுகாயம் அடைந்து மங்களூரு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பயணியாக வந்த குக்கர் வெடிகுண்டை எடுத்து வந்துள்ளது விசாரணையில் உறுதியாகி உள்ளது. 

இந்த குக்கர் வெடிகுண்டை அவர் திட்டமிட்டு அதே பகுதியில் வெடிக்க வைத்தாரா அல்லது வேறு பகுதிக்கு எடுத்துச் செல்லும்போது விபத்தாக குண்டு வெடித்து விட்டதா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பயணியாக வந்த நபரிடமிருந்து போலியான ஆதார் அட்டை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.ஆதார் அட்டையில் இருந்த எண் கொண்டு விசாரணை நடத்திய போது அந்த ஆதார் எண் கொண்ட நபர் வேறு பகுதியில் இருப்பதும் அவருக்கும் இந்த குண்டு வெடிப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. ஆகையால் போலியான ஆதார் எண்ணை உருவாக்கி குக்கர் குண்டை மர்ம நபர் எடுத்துச் சென்றுள்ளார் என காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். 

தீவிர காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தீவிரவாதி மங்களூரு நகரை சேர்ந்தவர் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. அவர் எந்த பகுதியில் இருந்து இங்கு வந்தார் எவ்வாறு இவருக்கு வெடிகுண்டு கிடைத்தது எந்த இலக்கை தாக்க முயற்சி செய்துள்ளார் என்ற பல கோணங்களில் தற்பொழுது காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒன்று அல்லது இரண்டு நாட்களில் இந்த குண்டு வெடிப்பு குறித்து முழு தகவல்களை காவல்துறை கண்டறியும் என கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா தெரிவித்துள்ளார்.