×

ஆடி மாத பூஜை -  சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு! 

 

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை  திறக்கப்படுகிறது.

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் ஆண்டுக்கு ஒரு முறை 60 நாட்கள் நடைபெறும் மண்டல , மகர விளக்கு பூஜைகளை தவிர தமிழ் மாதம் பிறக்கும் முதல் நாளன்று மாதம் தோறும் திறக்கப்படுவதை வழக்கமாக கொண்டுள்ளது. தமிழ் மாத பிறப்பை ஒட்டி முதல் ஐந்து நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

இந்நிலையில் ஆடி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. சிறப்பு பூஜைகள் நடைபெறாது என்பதால் இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட உள்ளது.  நாளை அதிகாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடத்தப்பட்டு பின் இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும்.  தொடர்ந்து ஐந்து நாட்கள் என வருகிற 21ஆம் தேதி வரை ஆடி மாத சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெற உள்ளது.

பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.  இதற்கான அனுமதி இதற்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்டது.  பக்தர்களின் வசதிக்காக நிலக்கல் பகுதியில் உடனடி தரிசனம் முன்பதிவு வசதி செய்யப்பட்டு வருகிறது. அத்துடன் கோயிலுக்கு  வரும் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.