×

பூமியை நோட்டமிட விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-52.. கவுன்ட்டன் ஸ்டார்ட் நவ்.. நாளை ரெடி ஜூட்!

 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ,  பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. உள்ளிட்ட பல்வேறு ரக ராக்கெட்டுகளை விண்ணுக்கு அனுப்பி வருகிறது. அந்த ராக்கெட்டுகள் விண்கலங்கள், செயற்கைக்கோள்களைத் தாங்கிச் செல்கின்றன. இந்தியா மட்டுமில்லாமல் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த செயற்கைக் கோள்களையும் இந்த ராக்கெட்டுகள் விண்ணில் ஏந்திச் செல்கின்றன. இதுவரை 53 பிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.

அதில் 50 பிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் வெற்றிக்கரமாக ஏவப்பட்டன. கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி பிஎஸ்எல்வி சி-51 ரக ராக்கெட் மூலம் பிரேசில் செயற்கைக்கோள், அமெரிக்காவின் 13 நானோ செயற்கைக்கோள்கள்கள், சென்னை மற்றும் கோவை கல்லூரி மாணவர்கள் தயாரித்த செயற்கை கோள்கள், இஸ்ரோவின் 5 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன. ஒரு செயற்கைக் கோளில் பிரதமர் நரேந்திர மோடி புகைப்படமும், பகவத் கீதையின் வாசகம் ஒன்றும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இச்சூழலில் நாளை பிஎஸ்எல்வி சி-52 ரக ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படவுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதில் பூமியை கண்காணிக்கும்   இஓஎஸ் -04  செயற்கைக்கோள், ரிசாட்- 1ஏ உள்ளிட்ட  செயற்கைகோள்கள் ஏவப்படவுள்ளன. இஒஎஸ்-04 செயற்கைக்கோள் 1,710 கிலோ எடையுடையது. இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள். இது புவியிலிருந்து 529 கி.மீ. உயரம் கொண்ட சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இந்த ரேடார் செயற்கைக்கோள் பூமியைக் கண்காணிக்கவும் ராணுவப் பாதுகாப்புக்கும் பயன்படும் என இஸ்ரோ கூறியுள்ளது. 

மழை, குளிர், வெயில் என அனைத்து பருவநிலைகளிலும் அதி துல்லியமான பூமியின் புகைப்படங்களை வழங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. விவசாயம், பேரிடா் மேலாண்மை, காடுகள் பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளுக்கு உதவிபுரியும் வகையில் செயற்கைக்கோள் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் ஏவப்படும் முதல் ராக்கெட் இதுதான். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதல் ஏவுதளத்திலிந்து நாளை காலை 5.59 மணிக்கு இந்த விண்வெளி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 25 மணி நேர கவுன்ட்டவுன் தொடங்கியுள்ளது.