×

உணவகங்கள் சேவை கட்டணம் வசூலிக்க கூடாது என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை

 

உணவகங்கள் சேவை கட்டணம் வசூலிக்க கூடாது என்ற உத்தரவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 

உணவகங்கள் தனியாக சேவை கட்டணம் வசூலிக்கக் கூடாது, உணவு கட்டணத்துடன் சேர்த்து ஜிஎஸ்டி மட்டுமே வசூலிக்க வேண்டும் என நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் சமீபத்தில் அறிவித்தது.  உணவகங்களோ தங்கும் விடுதிகளோ, வாடிக்கையாளர்களை சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று நிர்பந்தித்தால் 1915 என்ற எண்ணில் உணவகம் அல்லது விடுதிக்கு எதிராக புகாரளிக்கலாம் எனவும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மாறாக அந்த விடுதி அல்லது உணவகத்தின் சேவை பிடித்திருக்கும் பட்சத்தில் வாடிக்கையாளர்கள் அவர்களாக விருப்பப்பட்டு சேவைக் கட்டணம் கொடுக்கலாம். சேவை கட்டணம் அளிப்பது நுகர்வோரின் விருப்பப்படி என்பதை ஓட்டல்கள் உணவகங்கள் தெளிவாக தெரிவிக்க வேண்டும். உணவுக்கட்டணத்துடன் சேர்த்து மொத்த தொகைக்கு ஜிஎஸ்டி விதிப்பதன் மூலம் சேவை கட்டணத்தை வசூலிக்க முடியாது எனவும் விளக்கம் அளித்திருந்தது.

இந்நிலையில், உணவகங்கள் சேவை கட்டணம் வசூலிக்க கூடாது என்ற உத்தரவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. வாடிக்கையாளர்களிடமிருந்து உணவகங்கள் தனியாக சேவை கட்டணம் வசூலிக்கக் கூடாது என்ற மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்து டெல்லி உயர்நீதிமன்றம் உணவகங்கள் தனியாக சேவை கட்டணம் வசூலிக்க கூடாது என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.