×

உக்ரைனில் போர் மூளும் அபாயம்.. இந்தியர்கள் வெளியேற இந்திய அரசு உத்தரவு!

 

உக்ரைனில் போர்ப் பதற்றம் அதிகரித்து வருகிறது. ரஷ்யா நாளையே போர் தொடுக்கலாம் என அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி நாட்டு மக்களிடம் உருக்கமாக உரையாற்றியுள்ளார். உக்ரைன் எல்லையில் லட்சக்கணக்கான ராணுவ துருப்புகளை நிறுத்தி வைத்துள்ளதாகவும் அங்கே முகாம்கள் அமைத்து பயிற்சிகளில் ஈடுபடுவதாகவும் செய்திகள் வட்டமடிக்கின்றன. குறிப்பாக மருத்துவ முகாம்களும் அதிவிரைவாக ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இது நிச்சயம் போருக்கான அறிகுறி தான் என சொல்கிறார்கள்.

போரில் வீரர்கள் காயமடைந்தால் சிகிச்சையளிக்கும் நோக்கில் மருத்துவ முகாம்கள் உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதேபோல போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், குண்டு போடும் ஜெட்கள் போன்றவற்றையும் நிலைநிறுத்தியுள்ளதாக சாட்டிலைட் புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இதனால் எந்த நேரம் வேண்டுமானாலும் ரஷ்யா உக்ரைனில் ஊடுருவலாம் என தெரிகிறது. அதேபோல உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பான நேட்டோவைச் சேர்ந்த படைகளும் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. 

உக்ரைனில் போர்ச் சூழல் உருவாகும் நிலையில் இருக்கிறது. இதனை உணர்ந்து பல்வேறு நாடுகளும் தங்கள் மக்களையும் தூதரக அதிகாரிகளையும் திரும்ப அழைத்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அரசும், உக்ரைனில் வசிக்கும் இந்தியர்கள், மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைனில் தங்குவது அவசியமற்றது என்ற சூழலில் உள்ள இந்தியர்கள் குறிப்பாக மாணவர்கள் அங்கிருந்து வெளியேறலாம் என்று தெரிவித்துள்ளது. அங்குள்ள இந்தியர்கள் இந்திய தூதரகத்தை அணுகி தங்களின் விவரங்களைப் பதிவு செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது. இந்தியர்கள் உக்ரைன் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.