×

"எங்க நிலைப்பாடு இதான்".. கழுவுற மீனில் நழுவுற மீனாக இந்தியா - ஐநாவில் "நடுநிலை" குரல்!

 

அமெரிக்கா மற்றும ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ அமைப்புடன் கூட்டு சேர கூடாது என ரஷ்யா பல காலமாக உக்ரைனை எச்சரித்து வந்தது. ஏனென்றால் உக்ரைனில் நேட்டோ படைகள் நிறுத்தப்பட்டால் அது ரஷ்யாவை அமெரிக்கா நேரடியாக எதிர்ப்பதற்குச் சமம். அந்நாட்டின் பாதுகாப்புக்கே பெரும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும். இதனையொட்டியே நேட்டோவில் உக்ரைன் சேர புடின் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் உக்ரைன்  நேட்டோ அமைப்புடன் இணைவதில் தீர்க்கமாக இருந்தது. 

அதேபோல அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவை குற்றஞ்சாட்டின. ஒரு கட்டத்தில் மோதல் முற்றவே உக்ரைன் எல்லைகளில் ரஷ்யா போருக்கான ஒத்திக்கையை தொடங்கியது. நேற்று முன்தினம் போரையும் அறிவித்து உக்ரைன் ராணுவ மையங்களைத் தாக்கி அழித்து வருகிறது ரஷ்யா. இதற்கு பல்வேறு உலக நாடுகளுமே கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்டவையும் ரஷ்யாவை கரித்து கொட்டி வருகின்றன. இச்சூழலில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படுவதாக தகவல் வெளியானது.

அப்போதே ரஷ்யா, தங்களுக்கு எதிராக வாக்களிக்க கூடாது என இந்தியாவை எச்சரித்தது. அதேபோல உக்ரைனும் இந்தியாவின் ஆதரவை எதிர்பார்த்தது. ஆனால் யாருக்குமே பங்கம் வராமல் இந்தியா கழுவுற மீனில் நழுவுற மீனாக நழுவிக் கொண்டது. அமெரிக்கா, அல்பேனியா முன்மொழிந்த இந்த தீர்மானத்தில் இந்தியா வாக்களிக்காமல் நடுநிலை வகித்தது. பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட்ட 11 நாடுகள் அங்கீகரித்தன. இருப்பினும் ரஷ்யா வீட்டோ அதிகாரத்தை உபயோகித்து தீர்மானத்தை தோல்வியடைய வைத்தது. வீட்டோ என்பது பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இருக்கும் ஒரு நாடு தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தால் அது அங்கீகரிக்கப்பட்டாது.

தீர்மானத்தின் மீதான இந்தியாவின் நிலைப்பாடு குறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கான இந்திய பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி கூறுகையில், "பேச்சுவார்த்தை மட்டுமே பிரச்சினைகளுக்குத் தீர்வு காண ஒரே வழி. மனித உயிர்களைப் பறிப்பது எந்தத் தீர்வையும் கொடுக்காது. ராஜாங்க ரீதியிலான பேச்சுவார்த்தைகள் கைவிடப்பட்டதே தவறு. அதற்காக வருந்துகிறோம். மீண்டும் பேச்சுவார்த்தை பாதைக்கு திரும்புமாறு அனைத்துத் தரப்பையும் வலியுறுத்துகிறோம். உக்ரைனில் நடந்து வரும் தாக்குதலால் பெருமளவில் கவலை கொண்டுள்ளோம். 

வன்முறையை விடுத்து வெறுப்பைக் கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு திரும்புங்கள் என வேண்டுகிறோம். உக்ரைனில் உடனடியாக வன்முறையை கைவிட்டு போர்நிறுத்தம் செய்ய வேண்டும் என இந்தியா வலியுறுத்துகிறது. ஐநா வகுத்துள்ள சர்வதேச விதிகளை அனைவரும் பின்பற்றவும், ஒவ்வொரு நாட்டின் இறையாண்மையையும் எல்லையையும் மதித்து நடக்க வேண்டும். உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள், குறிப்பாக இந்திய மாணவர்களை மீட்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். பல்வேறு காரணங்களுக்காக இந்தியா இந்த தீர்மானத்தில் வாக்களிப்பதைத் தவிர்த்து நடுநிலை வகிக்கிறது" என்றார்.

இந்தியாவைப் பொறுத்தவரை தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவிக்காது. ஏனென்றால் இந்திய ராணுவத்தில் பெரும்பாலான தளவாடங்கள் ரஷ்யா நாட்டைச் சேர்ந்தது தான். அதேபோல ரஷ்யாவின் மிகப்பெரிய கூட்டாளி சீனா. ரஷ்யா என்ன செய்தாலும் அதனுடன் துணை நிற்கும் வகையிலான நோ லிமிட் ஒப்பந்தம் போட்டிருக்கிறது. இப்படியிருக்கையில் இந்தியா ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தால் அது சீனாவுக்கு கூடுதல் சாதகமாக அமைந்துவிடும். வேறு வழியே இல்லாமல் ரஷ்யாவுக்கு இந்தியா மறைமுக ஆதரவு தெரிவிக்கும். அந்த மறைமுக ஆதரவுக் குரல் தான் இந்த "நடுநிலை" வேஷம்.