×

அசாமில் சிவன் வேடமிட்டு விலைவாசி உயர்வு குறித்து தெரு நிகழ்ச்சி.. மத உணர்வுகளை புண்படுத்தியதாக கைது 

 

அசாமில் சிவன் வேடமிட்டு விலைவாசி உயர்வு குறித்து தெரு நிகழ்ச்சி நடத்திய நபரை இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாக போலீசார் கைது செய்தனர்.

அசாம் மாநிலம் நாகோன் நகரத்தில் கடந்த சனிக்கிழமையன்று நடிகர்கள் இருவர் சிவன் மற்றும் பார்வதி வேடமிட்டு ராயல் என்பீல்டு மோட்டார் சைக்களில் வலம் வந்து விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கம் தொடர்பான பிரச்சினையை மக்கள் மத்தியில் எடுத்துரைத்தனர். மக்களை எளிதாக கவரலாம் என்ற நோக்கத்தில் சிவன், பார்வதி வேடமிட்ட நபர்களுக்கு அதுவே வினையாகி போனது.

விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் போன்ற அமைப்புகள், அந்த நபர்கள் இருவர் மீதும் இந்து கடவுள் மற்றும் தெய்வத்தை மோசமாக சித்தரித்ததாகவும், அப்படி செய்ய உரிமை இல்லை என்றும் காவல் நிலையில் புகார் கொடுத்தனர். இதனையடுத்து இந்து மத உணர்வுகளை புண்படுத்தியாக சிவன் வேடமிட்ட நபரை நாகோன் நகர போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 2 நபர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை என தகவல்.

இது தொடர்பாக பிஷ்வ இந்து பரிஷத்தின் நாகோன் நகர செயலாளர் பிரதீப் சர்மா செய்தியாளர்களிடம் கூறுகையில், இது போன்ற செயல்களை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம். நாங்கள் தாராளவாதிகள் ஆனால்  அதை யாரையும் சாதகமாக எடுத்துக்கொள்ள அனுமதிக்கமாட்டோம். போராட்டத்துக்கு (விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கம்) எதிராக நாஙகள் எதுவும் கூறவில்லை. ஆனால் ஏன் எங்கள் கடவுள் மற்றும் தெய்வத்தின் பெயரை ஏன் பயன்படுத்த வேண்டும் அல்லது அவர்களை ஈடுபடுத்தி இழிவுபடுத்த வேண்டும் என தெரிவித்தார்.