×

இடிக்கப்பட்ட அனைத்து மதரஸாக்களும் மதரஸாக்கள் அல்ல, அல்கொய்தா அலுவலகங்கள்... அசாம் முதல்வர் 

 

அசாமில் இடிக்கப்பட்ட அனைத்து மதரஹாக்களும் மதரஸாக்கள் அல்ல அவை அல்கொய்தா அலுவலகங்கள் என்று அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்


அசாமில் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. தீவிரவாத தொடர்புகளுடன் சட்ட விரோத இஸ்லாமிய மதரஸாகளுக்கு எதிரான நடவடிக்கையை ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பா.ஜ.க. அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.  மேலும், தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த 3 மதரஸாக்களை அசாம் நிர்வாகம் இடித்தது. இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமையன்று கோல்பாரா மாவட்டத்தில் பகுரியா சார் பகுதியில் உள்ள மதரஸாவை உள்ளூர்வாசிகளே இடித்தனர். இதோடு சேர்த்து இதுவரை அந்த மாநிலத்தில் 4 மதரஸாக்கள் இடிக்கப்பட்டுள்ளன. 

அசாம் காவல்துறை இது தொடர்பாக கூறுகையில், கோல்பாரா மாவட்டத்தில் உள்ள ஒரு மதரஸாவையும், அதை ஒட்டிய வீட்டையும் பொதுமக்களே இடித்தனர். இடிக்கப்பட்ட மதரஸாவில் இருந்த வங்கதேசத்தை சேர்ந்த 2 பேர் மதரஸா வளாகத்தை ஜிஹாதி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியதாக அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். தற்போது அந்த இரண்டு பேரும் தலைமறைவாக உள்ளனர் என தெரிவித்தது.

மதரஸா இடிக்கப்பட்டது குறித்து அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறுகையில், இடிக்கப்பட்ட அனைத்து மதரஸாக்களும் மதரஸாக்கள் அல்ல, அல்கொய்தா அலுவலகங்கள். 2 முதல் 3 மதரஸாக்களை இடித்தோம், இப்போது மற்றவற்றை இடிக்க பொதுமக்கள் வருகிறார்கள். அல்கொய்தாவின் வேலை நடக்கும் மதரஸா வேண்டாம் என்று முஸ்லிம் சமூகம் இடிக்க வருகிறது.  அது மதரஸாவின் தன்மையை மாற்றுகிறது என தெரிவித்தார்.