×

 மலேசிய முன்னாள் அமைச்சர் டத்தோ சாமிவேலு  மறைவு.. பிரதமர் மோடி இரங்கல்.. 

 

மலேசிய முன்னாள் அமைச்சர் டத்தோ சாமிவேலு  மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

மலேசிய இந்திய காங்கிரசின் முன்னாள் தலைவராக இருந்தவர் டத்தோ சாமிவேலு. கடந்த 1979ம் ஆண்டு முதல்   2010ம் ஆண்டு வரை அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகித்து வந்தார்.  அரசியலில் இருந்து  மக்கள் சேவை ஆற்றியதோடு, 1963ல் இருந்து மலேசிய வானொலி மற்றும்  மலேசிய தொலைக்காட்சியில் பல ஆண்டுகள் தமிழ் செய்தி அறிவிப்பாளராக பணியாற்றினார். அதேபோல் மலேசிய தகவல் இலாகாவில் நாடக கலைஞராகவும் பணியாற்றி அவர்,  ஒரு தமிழ்மொழி ஆர்வலராக விளங்கினார்.  

அத்துடன் மலேசியாவில், தகவல் தொழில்நுட்பம், பொது பணி போன்ற பல முக்கிய  துறைகளின் அமைச்சராக பதவி வகித்திருக்கிறார்.  மேலும், மலேசிய அமைச்சரவையில் 29 ஆண்டுகள் மூத்த அமைச்சராக பதவி வகித்த இவர்,   நீண்ட காலம் மலேசிய அமைச்சரவையில் இருந்தவர் என்கிற பெருமைக்கும் சொந்தக்காரர்  இவர். அரசியல் வாழ்க்கையில்   பல்வேரும்  சாதனைகளையும்,   சோதனைகளையும் கடந்து வந்த  டத்தோ சாமிவேலு இன்று அதிகாலை  காலமானார்.  மலேசிய தமிழர் அரசியல் வரலாற்றில், மறக்க முடியாத அத்தியாயமாக இருந்து வரும்  ‘டத்தோ’வின்   இறுதிச்சடங்கு நாளை பிற்பகல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.  

 மலேசிய முன்னாள் அமிச்சர்  டத்தோ சாமிவேலுவின்   மறைவுக்கு  உலக  தலைவர்கள் பலரும்  இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  அந்தவகையில் இந்திய பிரதமர் மோடி, தனது டிவிட்டர் பக்கத்தில் , “மலேசியாவின் முன்னாள் கேபினட் அமைச்சரும், மலேசியாவின் முதல் பிரவாசி பாரதிய சம்மான் விருது பெற்றவருமான துன் டாக்டர். எஸ்.சாமிவேலுவின் மறைவு வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி” என்று தெரிவித்துள்ளார்.