×

குஜராத் பாலம் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம் -   பிரதமர் மோடி அறிவிப்பு.. 

 


மோர்பி தொங்கு பாலம் உடைந்து விபத்து ஏற்பட்டதில்  உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.  

குஜராத்தில் நேற்று மாலை 6.30 மணியளவில் மோர்பி  தொங்கு பாலம் உடைந்து ஆற்றுக்குள் விழுந்து விபத்துகுள்ளானதில் 130 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 177 பேரை மீட்கப்பட்டுள்ளதாகவும்,  19 பேர் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருவதாகவும்  மத்திய  அரசு அறிவித்துள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில்,  குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் இழப்பீடாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

அத்துடன் முதல்வர் பூபேந்திர படேல் தனது  அனைத்து நிகழ்வுகளையும் ரத்து செய்துவிட்டு, நிலைமையைக் கண்காணிக்கவும், தற்போது நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மறுபரிசீலனை செய்யவும் மோர்பிக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதேபோல் பிரதமர் மோடியும், குஜராத்தில் இன்று நடைபெற இருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்திருக்கிறார்.  மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000-ம் வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.