×

மின்சார மானிய திட்டம் ரத்து? - அக்டோபர் 1 முதல் தேவைபடுபவர்களுக்கு மட்டுமே மின்சார மானியம்

 

தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான அரசு பொறுப்பேற்ற போது மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் மின் கட்டணத்தில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

குறிப்பாக 200 யூனிட்-க்கும் குறைவான மின்சாரம் பயன்படுத்தும் மின் உபயோகிப்பாளர்கள் எவ்விதக் கட்டணமும் இல்லாமல் இலவசமாக பயன்படுத்தலாம். அதற்கான தொகையை மாநில அரசே ஏற்றுக்கொள்கிறது. இதேபோல் 201 யூனிட் முதல் 400 யூனிட் வரை பயன்படுத்தும் மின் உபயோகிப்பாளர்கள் 800 ரூபாய் மானியம் டெல்லி அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இவை தவிர வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணம் தனியாகவும், குடியிருப்புகளுக்கான மின் கட்டணமும் 3 ரூபாய், 4.30 ரூபாய்,  5.30 ரூபாய் என  8 ரூபாய் வரை வெவ்வேறு பிரிவுகளிலும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  

இந்நிலையில் அக்டோபர் 1ம் தேதி முதல் தேவைப்படுபவர்களுக்கு மட்டுமே மின்சார மானியம் வழங்கப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது. இதற்காக டெல்லி வாழ் மக்கள் மின்சார மானியம் தேவை என்றால் அதற்காக முன்கூட்டியே விண்ணப்பம் கொடுக்க வேண்டுமெனவும் அதன் அடிப்படையில் யாருக்கு மானியம் வழங்க வேண்டும் என்பது குறித்தும் அரசு அதிகாரிகள் முடிவு செய்வார்கள் என டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதனை கண்காணிக்க டெல்லி அரசு தனிக்குழு ஒன்றை அமைத்துள்ளதாகவும் மக்களிடமிருந்து வரும் கடிதங்களை பெற்று அதில் யாருக்கு மானியம் வழங்கலாம் என்பது குறித்தும் முடிவு செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.