×

பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த எலெக்ட்ரிக் காரில் தீ! 4 கார்களுக்கு பரவியதால் பரபரப்பு

 

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள நாம்பள்ளி கண்காட்சி வெளியே வாகன நிறுத்துமிடத்தில் பார்கிங் செய்யப்பட்ட எலெக்ட்ரிக் காரில் ஏற்பட்ட தீ, அடுத்தடுத்த கார்களுக்கு பரவியதால் 4 கார்கள் எரிந்து கருகின.

ஐதராபாத்தில் உள்ள நாம்பள்ளி  மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சிக்கு வழக்கமாக மாலை நேரத்தில் பொது மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். நேற்று சனிக்கிழமை என்பதால் மேலும் அதிக அளவில் இருந்தது. இந்நிலையில் மைதானத்தின்  எதிரே உள்ள ககன் விஹார் வாகன நிறுத்துமிடத்தில் பார்கிங் செய்யப்பட்டிருந்த ஒரு எலெக்ட்ரிக் காரில் ஏற்பட்ட தீ விபத்து அடுத்தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுருந்த 3 கார்களுக்கும் பரவி அனைவரும் பார்த்து கொண்டு இருக்கும்போதே 4 கார்கள் தீயில் கருகியது. உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்து மற்ற கார்களுக்கு தீ பரவாமல் பார்த்துக்கொண்டனர். 

கண்காட்சியில் பொதுமக்கள் அதிக அளவில் திரண்டு இருந்த நிலையில், தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  என்ன நடக்கிறது என்று பார்க்க ஏராளமானோர் திரண்டதால் நம்பப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன நிறுத்துமிடத்தில் மின்சார காரில் இருந்து திடீரென தீ பரவியதால் விபத்து ஏற்பட்டதாக போலீசார் உறுதி செய்தனர். வாகனங்கள் அருகே ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் மின்சார காரில் ஏற்பட்ட தீ பக்கத்து கார்களுக்கும் பரவியது. அதற்குள் தீயணைப்பு படையினர் தீயை அணைத்ததால் மேலும் தீ பரவாமல தடுக்கப்பட்டது. இதனையடுத்து தடை செய்யப்பட்ட போக்குவரத்தை போலீசார் சரி செய்தனர்.


இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு செகந்திராபாத் ராம்கோபால் நகரில்  உள்ள டெக்கான் ஸ்போர்ட்ஸ் வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் 10 மணி நேரம் போராடி தீயை அணைத்தாலும் கட்டிடத்தின் உள்ளே செல்ல முடியாததால் அதில் சிக்கி கொண்ட பிகாரை சேர்ந்த கடை ஊழியர்கள் வசீம், ஜாஹிர் மற்றும் ஜுனைத் ஆகியோர் ட்ரோன் கேமிரா மூலம் கட்டிடத்தில் வீடியோ எடுக்கப்பட்டு அடையாளம் தெரியாத வகையில் கருகிய நிலையில் இருந்த  சடலத்தை கண்டெடுத்துள்ளனர். அமைச்சர் தலசானி ஸ்ரீனிவாஸ் யாதவ் சம்பவ இடத்தை பார்வையிட்டு தீ விபத்து ஏற்பட்ட 6 மாடி கட்டிடம் அபாய கட்டத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அதனை சுற்றியுள்ள யாருக்கும் இடையூறு ஏற்படாத வகையில் கட்டடம் இடிக்கப்படும் என அப்பகுதி மக்களிடம் உறுதியளித்தார்.