×

சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் 

 

நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஜூலை 21ம் தேதி நேரில் ஆஜராக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை 2014ம் ஆண்டு சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்து 2015ம் ஆண்டு முதல் விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு ஜூன் 1ம் தேதி அமலாக்கத்துறை சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பியதும்ஆனால் ஜூன் 2ம் தேதி சோனியா காந்திக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவரால் ஆஜராக முடியவில்லை.  இருப்பினும் ஜூன் 8ம் தேதி ஆஜராகுமாறு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் கொரோனா பாதிப்பில் இருந்து மீளவில்லை என மருத்துவர் சான்றிதழ்களுடன் அமலக்கத்துறைக்கு சோனியா காந்தி தரப்பில் கடிதம் எழுதப்பட்டது. மேலும் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்திவுள்ளதால் இவ்வழக்கில் ஆஜராக மூன்று வார கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் சோனியா காந்தி தரப்பில் வலியுறுத்தப்பட்டது. 

அவகாசமும் அமலாக்கத் துறையினரால் சோனியா காந்திக்கு வழங்கப்பட்ட நிலையில்  இன்றைய தினம் அமலாக்கத்துறை தரப்பில் மீண்டும் சோனியா காந்திக்கு சம்மன்  அனுப்பப்பட்டுள்ளது.  அதில் நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக ஜூலை 21ம் தேதி டெல்லி ஏபிஜே அப்துல் கலாம் சாலையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.