×

சிறந்த குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு திகழ்வார் : பிரதமர் மோடி வாழ்த்து.. 

 

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரௌபதி  மூர்முவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வருகிற ஜூலை 24 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.   புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான  தேர்தல் வருகிற ஜுலை மாதம் 18 ஆம் தேதி நடைபெறும் என  இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.  இதனயடுத்து  வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பதில் கட்சிகள் தீவிரம் காட்டி வந்தனர்.  அதிலும்  பாஜகவுக்கு எதிரான வலுவான கூட்டணியை அமைக்கவும், பொதுவான வேட்பாளரை அறிவிக்கவும்  எதிர்க்கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. 

அந்தவகையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில்  குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராக திரௌபதி  மூர்மு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக  அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா  அறிவித்திருக்கிறார்.  முதன்முறையாக பழங்குடியின பெண் வேட்பாளருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.  மேலும்  திரௌபதி மூர்மு ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநராக பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த நிலையில்  குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரௌபதி மூர்முவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மோடி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட டுவிட்டர் பதிவில், 'சமூகத்துக்காகவும், ஏழை, அடித்தட்டு, விளிம்புநிலை மக்கள் அதிகாரம் பெறுவதற்காகவும் தனது வாழ்வை அர்ப்பணித்தவர் முர்மு. நல்ல நிர்வாக அனுபவத்தைப் பெற்றவரான அவர் ஆளுநராகவும்  மிகச் சிறப்பாக செயல்பட்டவர். கொள்கை விஷயங்கள் குறித்த முர்முவின் புரிதலும், அவரின் இரக்கத்தன்மையும் நம் நாட்டுக்கு பெரிதும் பயனளிக்கும். நம் நாட்டின் மிகச் சிறந்த  குடியரசுத் தலைவராகவும் திரௌபதி முர்மு திகழ்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.