×

அரசு வீட்டை காலி செய்ய சுப்ரமணிய சுவாமிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

 

அரசு வீட்டை 6 வாரத்திற்குள் காலி செய்து அதனை உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என சுப்ரமணிய சுவாமிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2016 ஆண்டு ஏப்ரல் 16 ந் தேதி முதல் 2022 ஏப்ரல் 24ம் தேதி வரை  மாநிலங்களவை உறுப்பினராக சுப்ரமணிய சுவாமி இருந்தார்.  நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு டெல்லியில் அரசு குடியிருப்பு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் சுப்பிரமணிய சுவாமிக்கு அரசு குடியிருப்பு வழங்கப்பட்டிருந்தது.  சுப்ரமணிய சுவாமியின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து  அரசு குடியிருப்பில் இருந்து காலி செய்யுமாறு துறை சார்ந்த அதிகாரிகள் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.  

இந்நிலையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக தற்போது தான் வசிக்கும் அரசு குடியிருப்பின் கால அவகாசத்தை மேலும் நீடித்து உத்தரவிட கோரி சுப்பிரமணிய சுவாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.  இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் வந்த போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் ஏற்கனவே டெல்லியில் மத்திய இணை அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கு அரசு குடியிருப்புகள் ஒதுக்கவில்லை எனவும் இத்தகைய சூழலில் சுப்பிரமணிய சுவாமி குடியிருக்கும் அரசு குடியிருப்பின் கால அவகாசத்தை மேலும் நீட்டிக்க முடியாது என தெரிவித்தனர்.  

மத்திய அரசின் பதிலை ஏற்றுக் கொண்ட டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடுத்த 6 வாரத்திற்குள் சுப்பிரமணிய சுவாமி வசிக்கும் அரசு குடியிருப்பை காலி செய்துவிட்டு அதனை உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.