×

தீண்டாமையின் உச்சம்- கடவுள் சிலையை தொட்டு வழிபட்ட தலித் சிறுவனுக்கு ரூ.60,000 அபராதம்

 

தீண்டாமையின் உச்சமாக  தலித் சிறுவன் கடவுள் சிலையை தொட்டதால் 60000 அபராதம் விதித்த கிராமத்தினரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் மாலூர் தாலுக்காவில் உள்ள உலேர ஹள்ளி என்ற கிராமத்தில் வசித்து வரும் சோபா மற்றும் ரமேஷ் தம்பதியரின் 15 வயதான மகன் சேந்தன் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். நான்கு நாட்களுக்கு முன்பு உலேர ஹள்ளி கிராமத்தில் உள்ள பூதம்மா கோவில் ஊர் திருவிழா நடைபெற்ற போது சேத்தன் கடவுள் சிலையை தொட்டு வணங்கி உள்ளான். இதை கண்ட கிராம மக்கள் தலித் சிறுவன் எவ்வாறு கடவுள் சிலையை தொடுவது என சேத்தன் மீது தாக்குதல் நடத்தி அவரது பெற்றோர்களை வரவழைத்து அந்த குடும்பத்திற்கு 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பதாகவும் அதை செலுத்த தவறினால் ஊரை விட்டு காலி செய்ய வேண்டும் எனவும் எச்சரித்துள்ளனர். தான் 300 ரூபாய் தின கூலிக்கு சென்று வருபவள் 60 ஆயிரம் ரூபாய் பணம் எங்களால் கட்ட இயலாது என சோபா கிராம மக்களிடம் கெஞ்சி மன்றாடிய போதும் அதை ஏற்காத கிராம மக்கள் ரூ.60,000 அபராத தொகையை கண்டிப்பாக கட்ட வேண்டும் என தெரிவித்துள்ளனர். 

இந்த செய்தி ஊடகங்கள் வழியாக வெளியான நிலையில் தலித் சங்கங்கள் ஷோபா மற்றும் ரமேஷ் தம்பதியினரை சந்தித்து ஆலோசனை வழங்கி அபராதம் விதித்த கிராமத் தலைவர்கள் எட்டு பேர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தலித் தம்பதியினர் புகார் வழங்கிய நிலையில் சிறுவன் குடித்துவிட்டு நடனமாடியதால் அவனை கண்டித்தோம் அபராதம் விதிக்கவில்லை என கிராம தலைவர்கள் சார்பில் காவல் நிலையத்தில் பதில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை வழக்கும் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தங்களுக்கு அபராதம் விதித்த கிராம தலைவர்களால் உயிருக்கு ஆபத்து உள்ளது தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருகிறது ஆகையால் தங்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஷோபா கோரிக்கை விடுத்துள்ளார். உரிய ஆதாரங்களை திரட்டி உடனடியாக அபராதம் விதித்த கிராம மக்களை கைது செய்ய வேண்டும் என தலித் அமைப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.