×

குஜராத் சம்பவம் - தொண்டர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட காங்கிரஸ் தலைவர் வேண்டுகோள்

 

குஜராத்தில் தொங்கு பாலம் விழுந்த விபத்தில், மீட்புப் பணிகளிலும், காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளையும் காங்கிரஸ் தொண்டர்கள் செய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேட்டுக் கொண்டுள்ளார்.

குஜராத்தில் நேற்று மாலை 6.30 மணியளவில் மோர்பி  தொங்கு பாலம் உடைந்து ஆற்றுக்குள் விழுந்து விபத்துகுள்ளானதில் 140க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்துள்ளனர். இதுவரை 177 பேரை மீட்கப்பட்டுள்ளதாகவும்,  19 பேர் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருவதாகவும்  மத்திய  அரசு அறிவித்துள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில்,  குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் இழப்பீடாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதேபோல் பிரதமர் மோடியும், குஜராத்தில் இன்று நடைபெற இருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்திருக்கிறார்.  மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000-ம் வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.  

இந்த நிலையில், குஜராத்தின் மோர்பி தொங்கு பாலம் விபத்து சம்பவம் தன்னை சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் மீட்புப் பணிகளிலும், காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளையும் காங்கிரஸ் தொண்டர்கள் செய்ய வேண்டும் என மல்லிகார்ஜுன கார்கே கேட்டுக் கொண்டுள்ளார்.