×

எல்ஐசியில் 20% அன்னிய முதலீடு.. ஆமோதித்த அமைச்சரவை - விரைவில் ஐபிஓ வெளியீடு! 

 

மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்றது முதல் அனைத்திலும் தனியார்மயத்தை ஊக்குவிக்கிறது என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. Dis-investment என்ற பெயரில் பொதுத்துறை நிறுவனங்களை தனியாரின் கட்டுப்பாட்டில் விடுகிறது. அதற்குப் பதிலாக குறிப்பிட்ட தொகையைப் பெற்று நாட்டின் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கும் மக்கள் நலத்திட்டங்களும் பயன்படுத்தப் போவதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால் இம்முடிவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களும் கடும் எதிர்ப்பை தெரிவிக்கின்றனர்.

போராட்டத்திலும் இறங்கினர். ஆனால் மத்திய அரசு தன் முடிவில் மாற்றமில்லை என அதன் நடவடிக்கை மூலம் உணர்த்துகிறது. அந்த வகையில் நாட்டின் மிகப்பெரிய சொத்தாகப் பார்க்கப்படும் எல்ஐசியின் பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பட்ஜெட்டிலும் நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் இதுகுறித்து பேசியிருந்தார். அதன்படி எல்ஐசி பங்குகளை விற்க அண்மையில் இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்தது. 5% பங்குகளை, அதாவது 31.6 கோடி பங்குகளை விற்பதற்கான வரைவு விண்ணப்பத்தை செபி அமைப்பிடம் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. இதன் மூலம் ரூ.63 ஆயிரம் கோடியை திரட்ட அரசு திட்டமிட்டுள்ளது.

ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. எப்போதுமே நாட்டில் பொருளாதார சிக்கல் ஏற்பட்டாலோ, மற்ற பொதுத்துறை நிறுவனங்கள் நிதிச் சிக்கலைச் சந்தித்தாலோ எல்ஐசி தான் உதவிக்கரம் நீட்டியுள்ளது. அப்படியிருக்கையில் அதனை விற்கும் முடிவு ஆபத்தானது என எதிர்க்கட்சிகள் புலம்புகின்றனர். குறிப்பாக அதனை உருவாக்கிய காங்கிரஸ் வேதனையடைந்துள்ளது. ஆனால் அரசு தரப்பிலோ, குறைவான அளவிலான பங்கை விற்பதால் பெரிய பாதிப்பு ஏற்படாது என சொல்லப்படுகிறது. யார் கத்துனாலும் கதறினாலும் தன் காரியத்தில் கண்ணாக இருக்கிறது மத்திய அரசு.

அந்த வகையில் தற்போது IPO எனப்படும் எல்ஐசி பொதுப் பங்கு வெளியீட்டை விரைவில் அரசு வெளியிடவிருக்கிறது. இந்த நிதியாண்டின் கடைசி நாளான மார்ச் 31ஆம் தேதிக்குள் இதனை வெளியிட ஆர்வம் காட்டி வருகிறது. இதனையொட்டி எல்ஐசியில் அன்னிய முதலீட்டுக்கும் அனுமதி வழங்க மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பொதுவாக மற்ற காப்பீடு நிறுவனங்களில் 74% வரை வெளிநாட்டினர் முதலீடு செய்ய முடியும். ஆனால் எல்ஐசியில் முதலீடு செய்ய முடியாத வகையில் சட்டம் திருத்தப்பட்டுள்ளது. தற்போது அதனை நிராகரித்து 20% வரை எல்ஐசி பங்கில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் வண்ணம் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.