×

டெல்லி துணை முதலமைச்சருக்கு லுக் அவுட் நோட்டீஸ்? - சிபிஐ மறுப்பு

 

மது விற்பனை உரிம முறைகேடு வழக்கில் தனக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளதாக டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா கூறியிருந்த நிலையில், அதனை சிபிஐ திட்டவட்டமாக மறுத்துள்ளது.  

டெல்லியில் புதிய மது கொள்கையை அமல்படுத்துவதில் முறைகேடு நடந்துள்ளதாக பாஜக குற்றம்சாட்டியதை அடுத்து சிபிஐ வழக்கு பதிவு செய்தது. மது விற்பனை உரிமம் வழங்கும் நடைமுறையை மாற்றி, அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டில் சிபிஐ அதிகாரிகள் டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா வீடு உள்ளிட்ட 30 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையானது சுமார் 14 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 16 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  இதனிடையே இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ தனக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா நேற்று தெரிவித்து இருந்தார். 


 
இந்நிலையில், மணிஷ் சிசோடியாவின் புகாருக்கு, சி.பி.ஐ., மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக தற்போது விசாரணை நடந்து வருவதாகவும், இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி பலருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை யாருக்கு எதிராகவும், லுக் அவுட் நோட்டீஸ் விடுக்கவில்லை எனவும், மணிஷ் சிசோடியா போன்று பொது சேவை பதவியில் உள்ளவர்களுக்கு எதிராக இதுபோன்ற நோட்டீஸ் வெளியிட வேண்டிய அவசியமும் இல்லை எனவும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.